தமிழ்நாடு

“நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது” - தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு

“நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது” - தனியார் பள்ளிகளுக்கு உத்தரவு

rajakannan

தனியார் பள்ளிகளில் வெளி நிறுவனங்கள் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கக் கூடாது என்று மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் கூறியுள்ளது. சிறப்பு வகுப்புகள் நடத்த தனியாக கட்டணம் வசூலிக்கவும் தனியார் பள்ளிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

நீட் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் பல தனியார் பள்ளிகள் நீட் தேர்வுக்கான பயிற்சிக்காக கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் மூலமாக அல்லாமல் தனியார் பயிற்சி அமைப்புகளுடன் இணைந்து இந்த நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது. இவ்வாறு அளிக்கப்படும் பயிற்சிகளுக்கு 2 லட்சம் ரூபாய் முதல் 4 லட்சம் வரை மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்கும் நிலை உள்ளது.

இந்நிலையில், தனியார் பள்ளிகளில் நீட் பயிற்சி வகுப்புகள் குறித்து மெட்ரிக் பள்ளிகள் இயக்ககம் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அதில், ‘நீட் தேர்வுக்கான பயிற்சியில் சேருமாறு கட்டாயப்படுத்தக் கூடாது. நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சி வகுப்புகள் நடத்துவதால், வணிகமயமாக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், வெளி அமைப்புகளுடன் இணைந்து நீட் பயிற்சி அளிக்கும் தனியார் பள்ளிகளை மாவட்ட தலைமை கல்வி அதிகாரி கண்காணிக்க வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.