கோவையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் MY V3 Ads என்ற நிறுவனம் குறித்தும் அந்த நிறுவனத்தின் MD சக்தி ஆனந்தன் குறித்து, கோவை மாநகர காவல்துறை மற்றும் மாவட்ட ஆட்சியரிடம் சிலர் புகார் அளித்தனர். இந்நிலையில் தன் மீதும், MY V3 Ads நிறுவனம் மீதும் பொய் புகார் அளிக்கப்பட்டு இருப்பதாகவும், அந்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கூறி சக்தி ஆனந்தன் தனது நிறுவன ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் பிப்ரவரி 10 ஆம் தேதி போராட்டம் நடத்தினார்.
அப்போது அவர்கள் ‘காவல் ஆணையரை சந்திக்காமல் போக மாட்டோம்’ எனக்கூறி காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உட்பட இரு பிரிவுகளின் கீழ் ரேஸ்கோர்ஸ் போலீசார் சக்தி ஆனந்தை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமீனில் வெளியே வந்தார்.
My v3 ads நிறுவனத்தின் உரிமையாளர் சக்தி ஆனந்தன் மற்றும் பிற உரிமையாளர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்கு தற்பொழுது பொருளாதார குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிறுவனத்திற்கு ஹெர்பல் மற்றும் உணவுப் பொருட்களை சப்ளை செய்த விஜயராகவன் என்பவர் போலி பட்டப்படிப்பு சான்றிதழ் வைத்து ஏமாற்றியது தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிறுவனத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தியது தொடர்பாகவும் கோவை மாநகர காவல் துறை சார்பில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு உள்ளான, குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிறுவனத்தின் பெயரிலும் , அந்த நிறுவனத்தின் கிளை நிறுவனம் பெயரிலும், தனி நபர்கள் முதலீடு செய்வதாகவும், அத்தகைய முதலீட்டை வழக்கு பதிவு செய்யப்பட்ட பின்னரும் மேற்படி நிறுவனம் சட்ட விரோதமாக வசூலிப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவுகிறது.
பொதுமக்கள் குற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட மற்றும் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள மேற்குறிப்பிட்ட ( MYV3 ads) நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்ற தகவல் வந்தால் அது சட்ட விரோதமானது மற்றும் மோசடியானது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். இதுபோன்ற செய்திகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கோவை மாநகர காவல் துறை அறிவுறுத்தியுள்ளது.