தமிழ்நாடு

தாமிரபரணி ஆற்றிற்கு செல்லவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்

தாமிரபரணி ஆற்றிற்கு செல்லவேண்டாம் - ஆட்சியர் அறிவுறுத்தல்

webteam

அதிகப்படியான நீர் வந்து கொண்டிருப்பதால் தாமிரபரணி ஆற்றுப்பகுதிக்கு பொதுமக்கள் செல்லவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பாபாநாசம் , சேர்வலாறு ஆகிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதனால் நேற்று இரவு அதிகப்படியான உபரிநீர் வெளியேற்றப்பட்டதால் தற்போது தாமிரபரணி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. குறிப்பாக நேற்று இரவு 13 ஆயிரம் கனஅடித் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்த நிலையில் தற்போது இது குறைக்கப்பட்டு 11 ஆயிரம் கனஅடித் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் தாமிரபரணி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கு படிப்படியாக குறைந்து வருகிறது. 

இது குறித்து ஆட்சியர் ஷில்பா கூறும்போது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் இல்லை. இருப்பினும் தண்ணீர் அளவு அதிகமாக இருப்பதால் ஆற்றுப்பகுதிக்கு யாரும் செல்ல வேண்டாம். குளிக்கவும் வேண்டாம். பாபநாசம், அம்பாசமுத்திரம் , நெல்லை மற்றும் பாளையங்கோட்டை ஆகிய நான்கு தாலுகாக்களிலும் பேரிடர் மேலாண்மைக் குழுத் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட பகுதி முழுவதும் வருவாய்த்துறையினர், காவல்துறையினர், பொதுப்பணித்துறையினர் உஷார்படுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவித்தார்.