மின்வெட்டு விவகாரத்தில் தவறான தகவல்களை கொடுப்பதை தவிர்த்து பிரச்னை என்ற அடிப்படையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தினார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கொங்கணாபுரம் பகுதியில் அதிமுக சார்பில் பெண்களுக்கான இலவச தையல் பயிற்சி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சி முகாமை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்... நிலக்கரி பற்றாக்குறை காரணமாக தமிழகத்தில் நிலவிவரும் மின்வெட்டை சரி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்;. மின்வெட்டு விவகாரத்தில் அமைச்சர் தவறான தகவல்களை கொடுப்பதை தவிர்த்து அது பொதுப்பிரச்னை என்ற அடிப்படையில் சீர் செய்ய வேண்டும். அவ்வப்போது ஏற்படும் மின்வெட்டால் தமிழகத்தில் விவசாயம் உள்ளிட்ட அனைத்து தொழில்களும் பாதிக்கப்படுகிறது.
தஞ்சாவூர் தேர் விபத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை வரும் திங்கட்கிழமை நானும், ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ்-ம் நேரில் சென்று ஆறுதல் கூற உள்ளதாகவும் தெரிவித்த அவர் தொடர்ந்து... உட்கட்சி விவகாரத்தில் கருத்து வேறுபாடுகள் இருப்பது வாடிக்கை. இளங்கோவன் ஏற்கெனவே சேலம் கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளராக செயல்பட்டு வந்தார்.
அதேபோல் ஜெயலலிதா அவருக்கு கொடுத்த மாநில கூட்டுறவு வங்கித் தலைவர் பொறுப்பிலும் சிறப்பாக செயல்பட்டவர் என்ற அடிப்படையில் அவருக்கு சேலம் புறநகர் மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.