முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான திமுகவின் ஊழல் குற்றச்சாட்டுகள் ஆதாரம் இல்லாத அவதூறுகள் எனவும், பொய் பரப்புரையின் துவக்கமே திமுகவின் கிராம சபை கூட்டங்கள் எனவும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆளுநரை சந்தித்து, முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீது ஊழல் புகார் பட்டியல் வழங்கினார். அதனைத்தொடர்ந்து திமுக சார்பில் மாநிலம் முழுவதும் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், அதிமுகவை கடுமையாக விமர்சித்தனர்.
இந்நிலையில் அதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அமைச்சர் பாண்டியராஜன் ஆவடி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும்போது, விவசாயிகளின் ஊதியம் திமுக ஆட்சியில் 170 ரூபாயாக இருந்ததாகவும் ஆனால் தற்போது 410 ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசியவர் ஸ்டாலின் கூறியது அனைத்துமே உண்மைக்கு புறம்பானது. அவர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனக் கூறினார்.
திமுகவினர் கூறும் ஊழல் புகார் எதுவும் ஆதாரமற்றவை. புதிய வேளாண்மை சட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு பல புதிய வாய்ப்புகள் உருவாகும். இதன் புரிதல் இல்லாமல் ஸ்டாலின் பேசி வருகிறார். தமிழகத்தில் விவசாயிகள் சந்தோஷமாக உள்ளனர். அவர்களின் வருமானம் உயர்ந்துள்ளது என்றார்.