தமிழ்நாடு

கூட்டணி பொதுக்கூட்ட மேடையிலிருந்து விஜயகாந்த், வாசன் படங்கள் நீக்கம்

webteam

பிரதமர் மோடி பங்கேற்கு அதிமுக-பாஜக பொதுக்கூட்ட மேடையிலிருந்து தேமுதிக தலைவர் விஜயகாந்த், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் படங்கள் நீக்கப்பட்டுள்ளன.

சென்னையை அடுத்த கிளாம்பாக்கத்தில் அதிமுக-பாஜக கூட்டணி தலைவர்கள் பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு கூட்டணி பரப்புரையை தொடங்குகிறார். இந்தப் பொதுக்கூட்ட மேடையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் படம் இன்று காலை இடம்பெறாமல் இருந்தது. அதேசமயம் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் படம் வைக்கப்பட்டிருந்தது. எனவே, ஜி.கே.வாசன் கூட்டணி சேர்ந்துவிட்டதாக கூறப்பட்டது. 

பின்னர், புகைப்பட பட்டியலில் விஜயகாந்த் படம் சேர்க்கப்பட்டது. இதனால் அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுவது உறுதியாகிவிட்டதாக கூறப்பட்டது. இதையடுத்து, சென்னை விமான நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆலோசனை நடத்தினர். 

சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த ஆலோசனையில் தேமுதிக துணைச் செயலாளர் சுதீஷ் இணைந்தார். இதனால், கூட்டணி அறிவிப்பு சற்று நேரத்தில் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதற்கிடையே, தேமுதிக நிர்வாகிகள் சிலர் திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டிற்குச் சென்று, அவருடன் ஆலோசனை நடத்தியதால் அரசியல் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தின் பேனரில் இடம்பெற்றிருந்த விஜயகாந்த் புகைப்படம் அகற்றப்பட்டுள்ளது. அத்துடன் ஜி.கே.வாசன் புகைப்படமும் அகற்றப்பட்டுள்ளது. இந்த நிகழ்வு கூட்டணி இன்னும் உறுதியாகவில்லை என்பதையும், தேமுதிகவிற்குள் உட்கட்சி பூசல் ஏற்பட்டிருப்பதையும் எடுத்துக்காட்டும் வகையில் அமைந்துள்ளது.