நெல்லை பாளையங்கோட்டை பெல் மைதானத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்புரையாற்றினார். நெல்லையப்பரையும் காந்திமதி அம்மையையும் வணங்கி தனது உரையைத் தொடங்குவதாக கூறிய பிரதமர், “திருநெல்வேலி மக்கள் அனைவரும் அல்வா போல இளகிய மனம் கொண்டவர்கள். தமிழக மக்கள் பாரதிய ஜனதா மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அவர்களின் நம்பிக்கையை பாரதிய ஜனதா காப்பாற்றும்” என தெரிவித்தார்.
மத்திய அரசின் உஜ்வாலா திட்டம், வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு உள்ளிட்ட திட்டங்களை பட்டியலிட்ட பிரதமர், தமிழக மக்கள் பாஜகவை நோக்கி வரத்தொடங்கியிருப்பதாக தெரிவித்தார்.
மேலும் பேசிய அவர், “நாடு நூறு மடங்கு முன்னேற்றம் அடைந்தால், அதற்கு இணையாக தமிழ்நாடும் முன்னேறும். தமிழக அரசு ஒத்துழைப்பு கொடுக்காமல் இருந்தாலும் அதை மீறி மத்திய அரசு மக்களுக்கு நன்மை செய்கிறது. ஸ்ரீரங்கம், தனுஷ்கோடி உள்ளிட்ட இடங்களுக்குச்சென்று வழிபட்டபின் அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. திமுகவினர் வெறுப்பு அரசியலை பரப்புகின்றனர். ஒரே குடும்பத்தின் வளர்ச்சியைத் தவிர மாநில வளர்ச்சியை திமுகவினர் பார்க்கவில்லை என்பதை நிரூபிக்கின்றனர். 2024 தேர்தலுக்குப்பின் திமுக இருக்காது.
திருநெல்வேலி- சென்னை வந்தே பாரத் வந்த பிறகுதான் உங்கள் பகுதியில் மிகப்பெரிய முன்னேற்றம் தொழில் வளத்திலும் போக்குவரத்திலும் ஏற்பட்டுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மற்றும் விருதுநகரில் சூர்ய மின்சக்தி திட்டம் விரைவில் நிறைவு பெற உள்ளது. இதன் மூலம் 2 லட்சம் பேருக்கு வேலை கிடைக்கும். தற்போது மோடியிடம் 10 வருடம் ஆட்சி செய்த அனுபவம் இருக்கிறது. உங்கள் தமிழ் மொழியில் பேச முடியவில்லை என்ற ஏக்கம் அதிகமாக இருக்கிறது. மக்கள் என்மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு கையெடுத்து வணங்குகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.