14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 8-ஆம் தேதி நடைபெற உள்ள நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்திற்கு திமுக ஆதரவு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு பதிலாக, அவற்றை பறிப்பதில் ஆளும் பாஜக அரசு தீவிரம் காட்டி வருவதாக குற்றம்சாட்டியுள்ளார். ஊதியம், தொழிலாளர் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி முறையிட்டும் கடந்த ஆறு வருடங்களாக பாஜக அரசு தொழிலாளர்களை வஞ்சித்து வருவது கண்டனத்திற்குரியது என ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தொழிலாளர்கள் நலனுக்காக பாடுபட்டு வரும் சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வரும் 8-ஆம் தேதி தேசிய அளவில் நடத்த இருக்கும் வேலை நிறுத்த போராட்டத்துக்கு திமுக ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். மேலும் போராட்டம் அறிவித்துள்ள தொழிற்சங்க பிரதிநிதிகளை பிரதமர் மோடி உடனடியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.