Annamalai, RS Bharathi File image
தமிழ்நாடு

"48 மணி நேரம்தான்; பகிரங்க மன்னிப்புடன் ரூ500 கோடி இழப்பீடு தரணும்" - அண்ணாமலைக்கு செக் வைத்த திமுக!

Snehatara

திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, அண்ணாமலைக்கு அனுப்பியுள்ள நோட்டீஸில், DMK FILES என்ற தலைப்பில் சுமார் 15 நிமிடங்கள் ஓடும் வீடியோவில் திமுக மீது பல தவறான, ஆதாரமற்ற, அவதூறான, கற்பனையான குற்றச்சாட்டுகளை அண்ணாமலை கூறியிருப்பதாக குறிப்பிட்டுள்ளார். வருமான வரித்துறை உள்ளிட்ட உரிய அதிகாரிகளிடம் திமுகவின் சொத்துகள் மற்றும் கடன்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள ஆர்.எஸ்.பாரதி, சொத்து விவரங்களை மறைத்திருந்தால் அந்த துறை உரிய நடவடிக்கை எடுத்திருக்கும் என்று தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் பணமோசடியில் ஈடுபடவே துபாய்க்குச் சென்றார் எனவும் அண்ணாமலை முற்றிலும் உண்மைக்கு புறம்பான குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். நோபல் ஸ்டீல் நிறுவனத்தில் உதயநிதி ஸ்டாலின் எந்தக் காலத்திலும் எந்த பொறுப்பையும் வகித்தது இல்லை என்றும், துபாயில் ஒப்பந்தம் கையெழுத்தான நோபல் ஸ்டீல்ஸ் நிறுவனத்துக்கும், நோபல் பிரமோட்டர்ஸ் நிறுவனத்துக்கும் எந்த ஒரு தொடர்பும் இல்லை என்றும் ஆர். எஸ்.பாரதி குறிப்பிட்டுள்ளார்.

RS Bharathi

நோபல் என்ற ஒரு பொதுவான பதத்தை மட்டும் வைத்துக் கொண்டு ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை திமுக தலைவரின் புகழுக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கோடு அண்ணாமலை முன்வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, அண்ணாமலை தனது பேச்சுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், அவரது சமூக ஊடகப் பக்கங்கள் மற்றும் இணையதளத்தில் உள்ள வீடியோவை நீக்க வேண்டும் என்றும் ஆர்எஸ் பாரதி வலியுறுத்தி உள்ளார். மேலும் இழப்பீட்டுத் தொகையாக, அண்ணாமலை 500 கோடி ரூபாய் வழங்க வேண்டும் என்றும், அந்தத் தொகை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு செலுத்த விரும்புகிறோம். இந்த அறிவிப்பு கிடைத்து 48 மணி நேரத்துக்குள் இவற்றை செய்ய தவறினால், அண்ணாமலைக்கு எதிராக சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும் என்றும் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.