தமிழ்நாடு

“இந்திய பகுதியல்ல காஷ்மீர் என சொல்லவில்லை” - வழக்கறிஞர் சரவணன் விளக்கம்

Rasus

தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சியில் காஷ்மீர் இந்தியாவிற்கு சொந்தமான பகுதி அல்ல என, இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிரான எந்தக் கருத்தையும் தான் சொல்லவில்லை என திமுக வழக்கறிஞர் சரவணன் விளக்கம் அளித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 12.08.2019 ஆங்கில தனியார் தொலைக்காட்சி ஒன்றில் காஷ்மீர் விவகாரம் பற்றிய விவாதத்தில், திமுகவின் சார்பாக கலந்துக்கொண்டதாக தெரிவித்துள்ளார். அதில் காஷ்மீர் பற்றிய வரலாற்றை பேச முற்படுகையில், “Kashmir was never an integral part of India” என்று சொன்னவுடன், நெறியாளர் பேச விடாமல் கடுமையான வார்த்தைகளால் தாக்க ஆரம்பித்ததாக கூறியுள்ளார். மற்ற பங்கேற்பாளர்களும் அவருடன் சேர்ந்து கடும் சொற்களை பயன்படுத்த ஆரம்பித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

பின்னர் நெறியாளரே தான் பேசியதை திரித்து, “Saravanan How can you say Kashmir is not a part of India” என சொல்ல, தான் “I said Was” என்று மறுத்து பதிலளித்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வரலாற்று நிகழ்வை குறிக்கும் விதமாகத்தான் “Kashmir was never an integral part of India” என்று சொன்னேன். ஆனால் தொடர்ந்து கருத்தை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்காமல் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தியதால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினேன் எனத் தெரிவித்துள்ளார். ஆனால் சமூக வலைத்தளங்களில் பாஜகவினர், போட்டோஷாப் செய்து பொய் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ள சரவணன்,  முழு வீடியோவையும் வெளியிடாமல், வெட்டியும், ஒட்டியும் வழக்கம்போல் பாஜகவின் பொய் புரட்டு வேலையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேசபக்தி பாடத்தை எங்களுக்கு யாரும் கற்றுக் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மு.க.ஸ்டாலின் ஏற்கெனவே கூறியிருக்கிறார். அந்த வகையில் தொண்டராகிய நானும், இந்திய ஒருமைப்பாட்டிற்கு எதிராக எந்தவொரு கருத்தையும் அந்நிகழ்ச்சியில் பதிவு செய்யவில்லை என்பதை மீண்டும் ஒருமுறை உறுதியாக தெரிவிக்க விரும்புகிறேன் என சரவணன் தெளிவுபடுத்தியுள்ளார்.