தமிழ்நாடு

சூடுபிடிக்கும் தேர்தல்களம்: இன்று முதல் திமுக விருப்பமனு!

சூடுபிடிக்கும் தேர்தல்களம்: இன்று முதல் திமுக விருப்பமனு!

webteam

சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்படுகின்றன.

தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, அனைத்து கட்சியினரும் பரப்புரைகளில் முனைப்புடன் ஈடுபட்டுள்ளனர். அடுத்தக்கட்டமாக விருப்பமனு பெறும் பணிகளுக்கான ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. அதன்படி, திமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விரும்புவோரிடமிருந்து இன்று முதல் விருப்ப மனுக்கள் பெறப்பட இருக்கின்றன.

இதுகுறித்து திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் ஏற்கனவே அறிக்கை வெளியிட்டிருந்தார். அண்ணா அறிவாலயத்தில் ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி படிவத்தைப் பெற்றுக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், வரும் 24 ஆம் தேதி வரை சமர்ப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

பொதுத்தொகுதிக்கு 25,000 ரூபாயும், மகளிர் மற்றும் தனித் தொகுதிக்கு 15 ஆயிரம் ரூபாயும் கட்டணமாக செலுத்தவேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, உங்கள் தொகுதியில் ஸ்டாலின் என்ற பெயரில், பரப்புரை மேற்கொண்டு வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று 4 ஆம் கட்ட பரப்புரையைத் தொடங்குகிறார்.

மதுரை ஒத்தக்கடையில் ஸ்டாலின் பரப்புரை செய்கிறார். நாளை தேனி மாவட்டத்தில் வாக்கு சேகரிக்கும் ஸ்டாலின், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் 22 ஆம் தேதி வரை பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.