தமிழ்நாடு

ஆ.ராசா அவதூறு பேச்சு : தமிழத்தின் பல்வேறு இடங்களில் போராட்டம்.

webteam

திமுக பொதுசெயலாளர் ஆ.ராசா முதல்வரை அவதூறாக பேசியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

முதல்வர் பழனிசாமி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் விமர்சித்ததாக அளிக்கப்பட்ட புகாரில் திமுக எம்.பி. ஆ.ராசா மீது 3 பிரிவுகளின் கீழ் மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆ.ராசாவை கண்டித்து சேலம் மாவட்டம் எடப்பாடி உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அதிமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

வேலூர் வேலூர், பள்ளிகொண்டா, குடியாத்தம், லத்தேரி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் 1000-க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அவர்கள் ஆ.ராசா முதல்வரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதே போல பொள்ளாச்சியிலும், நகர செயலாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் திருவள்ளுவர் திடலில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அதிமுக தொண்டர்கள் ராசாவை கைது செய்ய வேண்டும் என்றும் தொடர்ந்து இது போன்று பேசினால் அதிமுக தக்க பதிலடி கொடுக்கும் என்றனர்.

அதன் தொடர்ச்சியாக, திருச்சியிலும் அதிமுக பெண்கள் அமைப்பினர் ராசாவைக் கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் கூறும் போது, “ பொது வெளியில் அநாகரிகமாக பேசும் ராசாவை வன்மையாக கண்டிக்கிறோம். அவர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும். வருகின்ற தேர்தலில், திமுகவுக்கு தக்க பாடம் புகட்டுவோம்.”என்றனர்.

பூவிருந்தவல்லி பேருந்து நிலையம் முன்பும், அதிமுகவினர் ராசாவின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.