இவ்விழாவில் திமுகவின் பொருளாளரும் எம்.பி.யுமான டி.ஆர்.பாலு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், “எனக்கு முன்னால் பேசிச் சென்ற இளைஞர் அணி செயலாளர் ரொம்ப அடக்கி வாசித்தார். அப்பாவாக இருந்தாலும் போட்டி என்று வந்து விட்டால் எதுவும் இருக்கக் கூடாது. அவர் கழகத் தலைவர். நீங்கள் இளைஞர் அணியில் இருந்து 10 அடி பாய வேண்டும். ஆனால் அவரில் 50% செய்து காட்டுவோம் என அடக்கி வாசித்துள்ளார். 50 சதவிகிதம் என்றெல்லாம் போட்டியில் இருக்கக் கூடாது. நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ அதன்படி செய்ய வேண்டும். நீங்கள் எந்த அளவுக்கு பாய்வீர்கள் என சொல்ல வேண்டும். ஆனாலும் தன்னை தாழ்த்திக் கொண்டு உதயநிதி அவர்கள் இங்கே பேசியுள்ளார். ஆனாலும் மிக மிக பெரிய வெற்றியை அவர் பெறுவார் என நான் நம்புகிறேன்.
திமுக இவ்வளவு செய்த பிறகும் மக்கள் மாற்றி வாக்களிக்க மாட்டார்கள். ஆனாலும் தொண்டர்கள் தங்கள் பணியை செய்ய வேண்டும். ஒரு பக்கம் இளைஞரணி கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறது. இளைஞர் அணியை பார்த்தால் இந்தியாவே பயந்து கொண்டுள்ளது. இந்தியாவில் உள்ள அத்தனை மாநில தலைவர்களும் நமது இளைஞரணி தலைவரை பார்த்து பயந்து கொண்டு இருக்கிறார்கள், அடுத்து என்ன செய்யப் போகிறார்களோ என்று. எல்லாம் பொறாமை தான் வேறொன்றும் கிடையாது. உதயநிதி அவரது அப்பாவை பார்த்தால் மட்டும்தான் பயப்படுகிறார் வேறு யாரைப் பார்த்தாலும் பயப்படுவது கிடையாது.
அவர் பாட்டுக்கு என்ன வேணாலும் பேசுகிறார். என்ன வேண்டுமானாலும் பேசலாம், பேசிவிட்டு சமாளித்துக் கொள்ளலாம் என்று நினைப்பில் அவர் பேசுகிறார். ஆனால் தனது கையிலே வைத்துக் கொண்டிருக்கக் கூடிய பொருள் கீழே விழுந்து உடைந்து விடக்கூடாது என்ற நல்ல எண்ணத்தையும் மனதில் வைத்துக்கொண்டு மிகச் சிறப்பாக பணியாற்றுவது அவரது கடமை என்பதை நான் எச்சரிக்க விரும்புகிறேன். ஏதோ சாதாரணமாக பேசுகிறார்.
உதயநிதி சொல்லாத வார்த்தைகளையும் அவர் சொன்னதாக திருத்திக் கூறுகிறார்கள். இந்தியா கூட்டணியில் உள்ளவர்களும் என்னிடம் இப்படி உதயநிதி பேசி விட்டாரே என கேட்கிறார்கள் அவர்களுக்கு நான் மறுப்பு தெரிவித்து விளக்கம் கொடுத்துள்ளேன். இதற்காக நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் மிக மிக கவனமாக எடுத்து வைக்க வேண்டும் என்று அன்பு தம்பியின் மீது உள்ள பாசத்திற்காகவும் சிறு வயதில் இருந்து நான் தூக்கி வளர்த்த பிள்ளை என்கிற காரணத்தினால் வெற்றிப்பாதையைத் தவிர நாம் வேறு எதையும் எண்ணக் கூடாது.
திமுகவின் முப்பெரும் விழாவை வேலூரில் நடத்த காரணம் 1806 சிப்பாய் புரட்சி இங்கு தான் தொடங்கியது. அதன் மூலம் தான் விடுதலை பெற்றோம். இரண்டாவது சுதந்திரப் போர் தற்போது நடந்து கொண்டிருக்கிறது. அந்தப் போராட்டத்தில் 40க்கு 40 வெற்றி பெற்று நமது ஆட்சி செங்கோட்டையில் கொடி கட்டி பறக்க வேண்டும்” என எம்.பி. டி.ஆர்.பாலு பேசினார்.