இன்று நடைபெற்ற நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடரின்போது ஹிந்தி பேசும் மாநிலங்களை ’கோமூத்திர மாநிலங்கள்’ என செந்தில்குமார் திமுக எம்பி குறிப்பிட்டுப் பேசினார். இது சர்ச்சையானதைத் தொடர்ந்து, அதன் கூட்டணிக் கட்சியான காங்கிரஸே, மிகக் கடுமையான கண்டனங்களைப் பதிவுசெய்தது. இதையடுத்து, திமுக எம்.பி. செந்தில்குமார், தாம் பேசிய கருத்துக்கு மன்னிப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், இதுதொடர்பாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “நடந்து முடிந்த ஐந்து மாநிலச் சட்டசபைத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்துத் தெரிவித்த தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார், தவறான பொருள் கொள்ளத்தக்க சொல் ஒன்றைப் பயன்படுத்தி இருந்தார். இதனை அறிந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், செந்தில்குமாரைக் கடுமையாகக் கண்டித்தார்கள்.
பொதுவெளியில் கருத்துகளைச் சொல்லும்போது நாகரிகத்தையும் பண்பாட்டையும் காக்கும் வகையில், அனைவரும் நடந்துகொள்ள வேண்டும் என்று தலைமைக் கழகத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன.
பேரறிஞர் பெருந்தகை அண்ணா சுட்டிக்காட்டிய கடமை – கண்ணியம் - கட்டுப்பாடு ஆகிய மூன்றையும், அனைவரும் முறையாகப் பின்பற்றியாக வேண்டும். மேலும், அகில இந்தியப் பிரச்னைகள் பற்றிக் கருத்துச் சொல்லும்போது, தனிப்பட்ட முறையில் கருத்துகளைச் சொல்வதைத் தவிர்க்குமாறும் கேட்டுக் கொள்கிறேன்” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.