மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தபோது புறநானூறு பாடலை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சுட்டிக்காட்டியிருந்த நிலையில், திமுக எம்பி ஆ.ராசா திருக்குறளை குறிப்பிட்டு பட்ஜெட்டை விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தபோது, "யானை புகுந்த நிலம்" என்ற புறநானூறு பாடலை மேற்கோள் காட்டினார். யானை நிலத்துக்குள் புகுந்தால் அது உண்ணுவதை விட வீணாக்குவது அதிகமாக இருக்கும் என்று விளக்கினார்.
இந்தப் பாடலின் பொருள், விளைந்த நெல்லை அறுத்து உணவுக் கவளங்களாக்கி யானைக்குக் கொடுத்தால், ஒருமா அளவுக் கூட இல்லாத நிலத்தில் விளைந்த நெல்கூட பல நாட்களுக்கு யானைக்கு உணவாகும். ஆனால், நூறு வயல்கள் இருந்தாலும், யானை தானே புகுந்து உண்ண ஆரம்பித்தால் , யானை தின்பதைவிட யானையின் கால்களால் மிதிபட்டு அழிந்த நெல்லின் அளவு அதிகமாகும். அரசன் வரி திரட்டும் முறை தெரிந்து மக்களிடமிருந்து வரி திரட்டினால் நாடு கோடிக் கணக்கில் பொருள்களைப் பெற்றுத் தழைக்கும். அரசன் அறிவில் குறைந்தவனாகி, முறை அறியாத சுற்றத்தாரோடு ஆரவாரமாக அன்பு கெடுமாறு, நாள்தோறும் வரியைத் திரட்ட விரும்பினால், யானை புகுந்த நிலம் போலத் தானும் பயனடையாமல் உலகமும் (தன் நாடும்) கெடும் என்பதாகும்.
இந்நிலையில், திமுக எம்பி ஆ.ராசா திருக்குறளை குறிப்பிட்டு பட்ஜெட்டை விமர்சனம் செய்துள்ளார்.
"இயற்றலும் ஈற்றலும் காத்தலும் காத்த
வகுத்தலும் வல்ல தரசு"
என்ற வரியை சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, உற்பத்தி செய்தல், சேமித்தல், முதலீடு செய்தல், முன்கூட்டியே திட்டமிடல் இந்த நான்கையும் மன்னன் செய்திட வேண்டும். ஆனால் என்னைப் பொருத்தவரை, இந்த நான்கு அம்சங்களில் இந்த பட்ஜெட் முற்றிலும் தோல்வியுற்றுவிட்டது எனத் தெரிவித்தார்.