திமுக எம்.பி. அப்துல்லா pt web
தமிழ்நாடு

பெரியாரை மேற்கோள் காட்டிய திமுக எம்பி; அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்ட கருத்து; முதல்வர் கண்டனம்

காஷ்மீர் விவகாரம் குறித்தான விவாதத்தில் திமுக உறுப்பினர்களின் கருத்துக்களால் மாநிலங்களவையில் பெரும் சலசலப்பு ஏற்பட்டது.

PT WEB

மாநிலங்களவையில் ஜம்மு-காஷ்மீர் தொடர்பான விவாதம் நடைபெற்ற போது பெரியாரை மேற்கோள் காட்டி பேசிய திமுக உறுப்பினர் அப்துல்லா, ஒவ்வொரு இனத்துக்கும் தனது அரசை முடிவு செய்ய உரிமை உள்ளது எனவும் காஷ்மீர் மாநிலத்துக்கும் தனது அரசை தேர்ந்தெடுக்க அதிகாரம் உள்ளது என்றும் பொருள்படப் பேசினார்.

இது போன்ற கருத்துகள் அரசியல் சாசனத்துக்கு எதிரானது என மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கர் சுட்டிக்காட்டினார். அப்துல்லாவின் சர்ச்சை கருத்துகள் அவை குறிப்பில் இருந்து நீக்கப்படும் என ஜெகதீப் தன்கர் குறிப்பிட்டார்.

அப்போது காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பல உறுப்பினர்கள் பெரியாரின் கருத்துகளை அப்துல்லா குறிப்பிட்டதாக விளக்கம் அளிக்க முற்பட்டனர். உடனடியாக பாஜக உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சி இந்த சர்ச்சை கருத்துகளை ஆதரிக்கிறதா என வினாவினர். காங்கிரஸ் கட்சியின் ஜெயராம் ரமேஷ் இத்தகைய கருத்துகளை காங்கிரஸ் ஆதரிக்கவில்லை என தெரிவித்தார்.

இதனிடையே நாளை ஆட்சி மாற்றம் ஏற்பட்டு சட்டப்பிரிவு 370 திரும்ப கொண்டுவரப்பட்டால் என்ன செய்வீர்கள் என திருச்சி சிவா கேள்வி எழுப்பினார். அப்போது குறுக்கிட்டு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா சட்டப்பிரிவு 370 திரும்பக் கொண்டு வரப்படும் என்பது திமுகவின் கருத்தா அல்லது ஒட்டுமொத்த இண்டியா கூட்டணியின் கருத்தா என விளக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

இந்நிலையில் இவ்விவகாரத்தின் மீது கருத்து தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஸ்டாலின்

சமூகவலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “மாநிலங்களவையில் திமுக எம்.பி., M.m.அப்துல்ல உரையாற்றும்போது சுட்டிக்காட்டிய தந்தை பெரியாரின் மேற்கோளுக்கு பா.ஜ.க.வினர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்; பெரியாரின் பெயரும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்திலேயே கருத்துரிமையின் கழுத்து நெரிக்கப்பட்டுள்ளது!

மண்டல் ஆணையப் பரிந்துரையை அமல்படுத்தியபோது தந்தை பெரியார்தான் இதற்குக் காரணம் என்று பிரதமர் வி.பி.சிங் பேசிய நாடாளுமன்றத்தில் தந்தை பெரியார் பெயர் நீக்கப்பட்டுள்ளது அவமானம்! மக்களின் மனங்களில் நிலைத்து நின்று, வகுப்புவாதிகளை இன்றளவும் அச்சுறுத்தும் தந்தை பெரியாரின் பெயரை எங்கும் - எப்போதும் - எந்தச் சூழலிலும் பயன்படுத்துவோம்! அனைவரும் பயன்படுத்துங்கள்!” என தெரிவித்துள்ளார்.