எம்.எல்.ஏ மகன் மற்றும் மருமகள் கைது pt
தமிழ்நாடு

சிறுமியை சித்ரவதை செய்த வழக்கு: ஆந்திராவில் தலைமறைவாக இருந்த திமுக எம்.எல்.ஏவின் மகன், மருமகள் கைது!

வேலைக்கு சேர்ந்த சிறுமியை சித்ரவதை செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் ஆந்திராவில் பதுங்கியிருந்த பல்லாவரம் எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகளை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.

யுவபுருஷ்

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிராமம் ஒன்றைச் சேர்ந்த 17 வயது சிறுமி பல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் மற்றும் மருமகள் மெர்லினா மீது கடந்த சில தினங்களுக்கு முன்பு புகார் அளித்திருந்தார். பணிக்கு சேர்ந்த தன்னை தாக்கியதாகவும், சூடு வைத்து கொடுமைபடுத்தியதாகவும் அவர் அளித்த புகார் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பட்டியலினத்தைச் சேர்ந்த சிறுமியின் தாயர் சென்னை கொளப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 12ம் வகுப்பு படித்து முடித்த சிறுமி, மேற்படிப்பு படிக்கவைக்க முடியாத நிலையில், சென்னை திருவான்மியூர் பகுதியில் இடைத்தரகர் மூலம் பல்லாவரம் சட்டமன்ற திமுக உறுப்பினர் கருணாநிதியின் மகன் ஆண்டோ மதிவாணன் வீட்டில் வேலைக்கு சேர்த்துவிட்டுள்ளார்.

வீட்டு வேலைக்கு சேர்ந்த சிறுமி கடந்த 7 மாத காலமாக ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினாவும் ரேகாவை அடித்து துன்புறுத்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதை வெளியில் சொல்லக்கூடாது என்று மிரட்டியும் இருப்பதாக சிறுமி தரப்பில் கூறப்படுகிறது. இதனிடையே, சிறுமி பொங்கல் தினத்தை முன்னிட்டு தனது வீட்டிற்கு சென்றிருக்கிறார். தனது மகளின் உடலில் இருந்த காயங்களை பார்த்த செல்வி, அது குறித்து காரணம் கேட்கவும், ஆண்டோ மதிவாணனும் அவரது மனைவி மெர்லினாவும் அடித்து துன்புறுத்தியதை தாயிடம் அழுதபடி சொல்லி இருக்கிறார்.

மறுநாள் காலை, தனது மகளின் காயங்களுக்கு மருத்துவம் செய்வதற்காக உளுந்தூர்பேட்டை மருத்துவமனைக்கு தாய் கூட்டிச் சென்றுள்ளனர். அங்கு சிறுமியிடம் வாக்குமூலம் பெற்று மதிவாணன் அவரது மனைவி மெர்லினாமீது புகார் அளிக்கப்பட்டது.

சிறுமி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு பலரும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என குரல் கொடுத்து வந்தனர். இதனையடுத்து, பட்டியலின சிறுமியை துன்புறுத்தியதாக அளிக்கப்பட்டுள்ள புகாரில் திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் ஆன்ட்ரோ மற்றும் மருமகள் மார்லினா மீது எஸ்.சி., எஸ்.டி வன்கொடுமை சட்ட பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

ஆபாசமாக பேசுதல், குழைந்தைகள் வன்கொடுமை தடுப்பு சட்டம், குழைந்தைகள் பாதுகாப்பு சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார், இருவரையும் கைது செய்ய 3 தனிப்படைகளை அமைத்து தீவிரமாக தேடி வந்தனர். புகார் கூறிய இளம்பெண்ணுக்கு இன்று மருத்துவ பரிசோதனை செய்வதற்காக நேரில் வருமாறு போலீஸார் அறிவுறுத்தியிருந்தனர். இதற்காக அவர் நேரில் வருவதாக கூறிய நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே, ஆந்திராவில் பதுங்கி இருந்த எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் ஆகிய இருவரையும் தனிப்படை போலீஸார் இன்று கைது செய்துள்ளனர்.