திருவள்ளுவர் காவி உடை அணிந்திருப்பது போல பாஜக சார்பில் வெளியிடப்பட்ட புகைப்படத்திற்கு திமுக தலைவர் ஸ்டாலின் எதிர்க்கருத்து தெரிவித்துள்ளார்.
பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலிருந்து நேற்று வெளியிடப்பட்ட பதிவில், “கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன் நற்றாள் தொழாஅர் எனின்” என்ற குறள் கூறப்பட்டிருந்தது. குறளுக்கான விளக்கம் ஒன்றினையும் பதிவிட்டிருந்தது.
அத்துடன், திருவள்ளுவர் காவி நிற உடையில் உள்ள படத்தையும் பதிவிட்டிருந்தனர். அந்த படத்தில் வள்ளுவர் திருநீர் பூசி, ருத்ராட்சம் அணிந்த நிலையில் இருந்தார். வழக்கமாக தமிழக அரசு சார்பில் வெளியிடப்படும் புகைப்படங்களில், திருவள்ளுவர் வெண்மை நிற ஆடை அணிந்திருப்பார். ஆனால் இந்தப் பதிவில் காவி நிறத்தில் அவர் உடை அணிந்திருந்ததால் இதற்கு திமுக, கம்யூனிட்ஸ்டு ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஸ்டாலின், “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்” என்று பாஜகவை சாடியுள்ளார்.