தமிழ்நாடு

 “வரதராஜன் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்” - மு.க.ஸ்டாலின் 

 “வரதராஜன் மீதான வழக்கைத் திரும்பப் பெற வேண்டும்” - மு.க.ஸ்டாலின் 

webteam

செய்தி வாசிப்பாளர் வரதராஜன் மீது பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

 
நாடக நடிகரான வரதராஜன் நேற்று வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், “தன்னுடைய நெருங்கிய உறவினர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட தனது உறவினரைச் சிகிச்சைக்காக அனுமதிக்கப் பல மருத்துவமனைகளுக்கு அலைந்துள்ளார். பாதிக்கப்பட்ட நபரை மருத்துவமனையில் அனுமதிக்கப் பல மருத்துவமனைகளை அணுகியும் படுக்கை இல்லை என மறுத்துவிட்டனர். இதுகுறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவமனை எம்டிக்கள், நிர்வாகிகளிடம் பேசியும் பயனில்லை. இவ்வாறு உள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் தங்களைப் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். இதுதான் இன்றைய நிலை” எனத் தெரிவித்திருந்தார்.
 
 
இதற்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுப்பு தெரிவித்ததோடு, வரதராஜன் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்திருந்தார். இதனிடையே, வரதராஜன் மீது, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தொற்று நோய்த் தடுப்பு சட்டம், பேரிடர் மேலாண்மை சட்டம், வதந்தி பரப்புதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
 
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அவரது ட்விட்டர் பக்கத்தில் வரதராஜன் மீது பதியப்பட்ட வழக்கைத் திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இது குறித்த அவரது பதிவில், “செய்தி வாசிப்பாளர் வரதராஜன் கொரோனா நோய்த் தொற்று நிலவரம் குறித்து வீடியோவாக பதிவிட்டிருந்ததைப் பொறுக்க முடியாமல் வழக்குப் பதிவு செய்திருப்பது கண்டனத்திற்குரியது. மிரட்டல் மூலம் உண்மைகளை மறைத்து விடலாம் என்ற எண்ணத்தை ஆட்சியாளர்கள் கைவிட வேண்டும். மேலும் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும்” என்று கூறியுள்ளார்.