தமிழ்நாடு

அமைச்சர் துரைக்கண்ணு குடும்பத்தினருக்கு நெருக்கடி தரப்பட்டதா?: ஸ்டாலின் கேள்வி

அமைச்சர் துரைக்கண்ணு குடும்பத்தினருக்கு நெருக்கடி தரப்பட்டதா?: ஸ்டாலின் கேள்வி

EllusamyKarthik

அண்மையில் காலமான தமிழகத்தின் வேளாண் துறை அமைச்சர் துரைக்கண்ணு மரணப்படுக்கையில் இருந்த போது அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி தரப்பட்டதா? அவரிடமிருந்த பல கோடி ரூபாய்களை மீட்கத்தான் மர்மக் கைதுகளா?  என தனது அறிக்கை மூலம் தமிழக அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளார் திமுக தலைவரும், தமிழக எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின்.

அதில் அவர் தெரிவித்துள்ளது…

“வேளாண் துறை அமைச்சராக இருந்த துரைக்கண்ணு உயிருக்குப் போராடிய போது அதிமுகவின் தலைமை பல நூறு கோடி ரூபாயை திரும்ப பெறுவதற்காக அவரது குடும்பத்தினருக்கு நெருக்கடி கொடுத்திருக்கிறது. பணத்திற்கு உத்தரவாதம் கிடைத்த பிறகே மரண அறிவிப்பு  வெளியாகி இருக்கிறது. 

ஜெயலலிதா மரணத்தின் மர்மத்தையே புதைத்தவர்களின் ஆட்சியில் ஓர் அமைச்சரின் மரண அறிவிப்பில் மர்மம் என்பதை புறக்கணிக்க முடியவில்லை. 

அமைச்சர் குடும்பத்திடம் கொடுத்து வைக்கப்பட்டு, மீட்கப்பட்ட தொகையின் மதிப்பு சுமார் 300 கோடி முதல் 800 கோடி ரூபாய்  வரை  இருக்கும் என்கின்றன செய்திகள். இதில் கணக்கில் வராத தொகை எவ்வளவு?

துரைக்கண்ணுவுக்கு மிகவும் நெருக்கமான கள்ளப்புலியூர் ஊராட்சி மன்றத் தலைவர் முருகனை கைது செய்ய ஐ.ஜி தலைமையில் 500 காவலர்கள் எதற்கு? பயங்கர பின்னணி என்ன? மேலும் நான்கு ஆதரவாளர்கள் கைது ஏன்?

மரணக்குழியிலும் ஊழல் நாற்றம் அடிக்கும் தன் ஆட்சியின் ‘மாட்சி’ பற்றி வாய் திறப்பாரா முதலமைச்சர்? துதி பாடி ‘பரிசில்’ பெறும் சிறு கூட்டத்தார் கருத்து தெரிவிப்பார்களா?

வருமான வரித்துறை, வருமான புலனாய்வு துறை, தேர்தல் ஆணையமும் உரிய நடவடிக்கை எடுப்பார்களா? மத்திய புலனாய்வுத் துறைக்கும், அமலாக்கத் துறைக்கும் இந்த செய்தி தெரியாதா? சீட் பேரத்திற்காக வேடிக்கை பார்த்தபடி அனுமதிக்கிறதா பாஜக அரசு?

பணத்தைக் கொண்டு சட்டமன்றத் தேர்தலை வளைத்து விடலாம் எனப் பகல் கனவு காண்கிறார்கள். மாபெரும் மக்கள் சக்திக்கு முன்னால் அதிமுகவின் பகல்கனவு சிதைந்து சிதறிவிடும்” என தெரிவித்துள்ளார்.