தமிழ்நாடு

ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதி உடல்

ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதி உடல்

webteam

ராஜாஜி அரங்கத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக கருணாநிதி உடல் திமுக தலைவர் கருணாநிதியின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக சென்னை ராஜாஜி அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ளது.

காவேரி மருத்துவமனையில் 10 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த திமுக தலைவர் கருணாநிதி, நேற்று மாலை 6.10 மணிக்கு உயிரிழந்தார். கருணாநிதி மறைவை அடுத்து அவரது உடலை சென்னை மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் அடக்கம் செய்ய திமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. கோரிக்கை அடங்கிய மனுவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் திமுக தலைவர்கள் கொடுத்தனர். ஆனால் தமிழக இந்தக் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. இதையடுத்து திமுக சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் இன்று காலை 8.30 மணியளவில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது.

இதற்கிடையே உயிரிழந்த கருணாநிதியின் உடல் அவரது கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டது. அங்கு கருணாநிதியின் உடலுக்கு அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். மேற்கு வங்க முதலமைச்சர் மமதா பானர்ஜி மற்றும் ரஜினிகாந்த் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். அங்கு மூன்று மணி நேரம் அஞ்சலி செலுத்தப்பட்ட பின்னர், அவரது உடல் சிஐடி காலனியில் உள்ள வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது. அங்கும் முக்கியப் பிரமுகர்கள் மற்றும் தொண்டர்கள் அஞ்சலி செலுத்தினர். 

இந்நிலையில் கருணாநிதியின் உடல் சென்னை ராஜாஜி அரங்கத்தில், பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு அஞ்சலி செலுத்துவதற்காக இரவு முதலே அங்கு தொண்டர்கள் குவியத்தொடங்கினர். அத்துடன் அதிகாலை முதல் தொண்டர்களின் வருகை அதிகரித்தது. இதைத்தொடர்ந்து பிற மாநில முதலமைச்சர்கள், பிரதமர் மற்றும் திரைப்பிரபலங்கள் என பலரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தவுள்ளனர்.