தமிழ்நாடு

இந்தத் தேர்தல் இரண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் - துரைமுருகன்

webteam

திமுக தொகுதி வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் “இந்தத் தேர்தல் இரண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தல்” என திமுக பொருளாளர் துரைமுருகன் கூறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் திருவிழா களைகட்டியுள்ள நிலையில், தமிழகத்தின் முக்கிய கட்சிகளாக இருக்கும் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களது வேட்பாளர் பட்டியலை நேற்று வெளியிட்டது. அதன்படி பல வேட்பாளர்கள் இன்று அவரவர் தொகுதியில் வேட்பாளர் அறிமுக கூட்டத்தை நடந்தியுள்ளனர். 

இந்நிலையில் வேலூர் மாவட்டம் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன், ராணிப்பேட்டை எம்எல்ஏ காந்தி ஆகியோர் உட்பட கலந்துகொண்டு திமுக சார்பில் அரக்கோணம் நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக ஜெகத்ரட்சகனை அறிமுகப்படுத்தி வைத்தனர்.

இந்த அறிமுகக் கூட்டத்தில் திமுக பொருளாளர் துரைமுருகன் பேசுகையில். “நடைபெற இருக்கின்ற தேர்தல் இரண்டு ஆட்சி மாற்றத்தை செய்யக்கூடிய தேர்தலாகும். ஒன்று மத்தியில் ஆளும் மோடி அரசை மாற்றும் தேர்தலாகவும், இரண்டாவது தமிழகத்தில் ஆளும் அஇஅதிமுக எடப்பாடி அரசை மாற்றும் தேர்தலாக இந்தத் தேர்தல் அமைய உள்ளது. அரக்கோணத்தில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தல் மோடியை மாற்றும் தேர்தல். மேலும் சோளிங்கர் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் எடப்பாடி அரசை மாற்றும் தேர்தல்” என்றார்.

மேலும் ஜெகத்ரட்சகன் என்ற தங்கத்தை அரக்கோணம் தொகுதி மக்களிடம் ஒப்படைப்பதாகவும் அவரை எம்பி ஆக எங்களிடம் திரும்ப பத்திரமாக ஒப்படைக்க வேண்டும் எனக் கட்சித் தொண்டர்களிடம் துரைமுருகன் கேட்டுக்கொண்டார்.