EPS pt desk
தமிழ்நாடு

"நீட் தேர்வு | திமுகவின் வெற்று அறிவிப்பால் விலைமதிப்பில்லா உயிர்களை இழந்து வருகிறோம்" - இபிஎஸ்

நீட் தேர்வை ரத்து செய்ய திமுக நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்கவில்லை. திமுகவின் வெற்று அறிவிப்பால் விலைமதிப்பில்லா உயிர்களை இழந்து வருகிறோம் என்று இபிஎஸ் தெரிவித்தார்.

PT WEB

செய்தியாளர்: S.மோகன்ராஜ்

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே நீட் தேர்வில் தோல்வியடைந்து விபரீத முடிவெடுத்த மாணவி புனிதாவின் வீட்டிற்குச் சென்ற அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, மலர் தூவி அஞ்சலி செலுத்தியதோடு குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார். தொடர்ந்து, மாணவி புனிதாவின் குடும்பத்திற்கு அதிமுக சார்பில் இரண்டு லட்சம் ரூபாய் நிதி உதவியை வழங்கினார்.

எடப்பாடி பழனிசாமி, மலர் தூவி அஞ்சலி

இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி...

”நீட் உயிரிழப்புகளுக்கு ஆளும் திமுகவே காரணம். தேர்தல் நேரத்தில் நீட் தேர்வை ரத்து செய்வோம் என ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கூறினார்கள். குறிப்பாக நீட் தேர்வு ரத்து செய்வதற்கான ரகசியம் தங்களிடம் இருப்பதாக உதயநிதி கூறினார். ஆனால், ஆட்சிப் பொறுப்பேற்று 41 மாத காலமாகியும் இதுவரை உதயநிதி நீட் தேர்வை ரத்து செய்வதற்கான ரகசியத்தை வெளியிடவில்லை.

நீட் தேர்வை ரத்து செய்வதற்காக கையெழுத்து இயக்கம் நடத்தி பெற்ற கடிதங்கள் மக்கள் காலடியில் கிடந்தது. நாட்டு மக்களை ஏமாற்றுவதில் வல்லவர்கள் திமுகவினர் போலி அறிவிப்பின் மூலமாக விலைமதிக்க முடியாத இழப்புகளை சந்தித்து வருவகிறோம். நீட் தேர்வை கொண்டு வந்தது திமுகவும், காங்கிரஸ் கட்சியும்தான். நீட் தேர்வை கொண்டு வந்த திமுகவே ரத்து செய்வோம் என கூறி இரட்டை வேடம் போடுகிறது.

நிதி உதவி

திமுகவின் வெற்று அறிவிப்பின் மூலமாக விலைமதிக்க முடியாத உயிரிழப்புகளை சந்தித்து வருகிறார்கள்.. நீட் தேர்வை ரத்து செய்ய திமுக நாடாளுமன்றத்தில் அழுத்தம் கொடுக்கவில்லை. நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் மாநில அரசு மற்றவர்கள் மீது பழிபோடக் கூடாது. பிரதமரை பலமுறை சந்தித்தும் முதல்வர் இந்த விவகாரம் குறித்து பேசவில்லை” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறினார்.

மேலும், ”நீட் தேர்வில் தோல்வியடைந்தால் மனம் உடைந்துவிடக் கூடாது. எத்தனையோ படிப்புகள் வேலைவாயப்புகள் உள்ளன என்பதை மாணவ மாணவியர் புரிந்துகொள்ள வேண்டும். நீட் தேர்வில் தோல்வியடைந்தால் தற்கொலை என்ற முடிவுக்கு செல்லக்கூடாது” எனவும் அவர் அறிவுறுத்தினார்.