உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் திமுக எம்.எல்.ஏ-க்கள் தமிழகத்தில் தற்போது அதிமுக ஆட்சி வேண்டும் என சொல்லுவார்கள் என மதுரையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
நடைபெற்று முடிந்த நீட் தேர்வில் இந்திய அளவில் 30-வது இடமும் தமிழக அளவில் முதல் இடமும் பெற்ற மதுரை கேகே நகரைச் சேர்ந்த மாணவன் திரிதேவ் விநாயகாவிற்கு, பாரதி யுவகேந்திரா சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், மாணவன் திரிதேவ் விநாயாகாவுக்கு பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசும்போது, திமுக ஆட்சி பொறுப்பேற்ற உடன் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் கூறினார்கள், ஆனால், நீட் தேர்வு ரத்து குறித்து வாய் திறக்க திமுக தயாராக இல்லை. நீட் தேர்வு ரத்து விவகாரத்தில் திமுக ஒரு இன்ச் கூட அடி எடுத்து வைக்கவில்லை.
அதிமுக ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வு தரவரிசை பட்டியலில் தமிழகம் 15-வது இடத்தை பிடித்தது, திமுக ஆட்சிக் காலத்தில் நீட் தேர்வு பட்டியலில் தமிழகம் 28-வது இடத்தை பிடித்துள்ளது. நீட் தரவரிசை பட்டியலில் தேர்ச்சி சதவீதம் தமிழகம் இறங்கி கொண்டேபோவது துரதிர்ஷ்டவசமானது. திமுகவுக்கு வழிகாட்டியாக எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த 7.5 சதவீத இடஒதுக்கீடு திகழ்கிறது.
மதுரையில் அதிமுக ஆட்சிக் காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை முதல்வர் திறந்து வைத்துள்ளார், அதையே சாதனை என பட்டியலிட்டு பேசி சென்றுள்ளார். அமைச்சர் மூர்த்தி இல்ல திருமண விழாவில் மணமக்களை வாழ்த்தாமல் அதிமுகவை வசைபாடி சென்றுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் தற்காலிக பதவியில் உள்ளார் என முதல்வர் கூறியுள்ளார். ஸ்டாலின் திமுகவில் எவ்வாறு பதவிகளுக்கு வந்தார் என நினைவில் கொள்ள வேண்டும். கருணாநிதி கையை பிடித்து திமுகவில் பதவி பெற்றவர் ஸ்டாலின். தந்தை கைப்பிடித்து அரசியலுக்கு வந்தவர் ஸ்டாலின். தந்தை உயிரோடு இருக்கும் வரை தலைவர் பதவிக்கு அவர் வரவில்லை. எங்கள் கட்சி பற்றி பேசுவது ஆளுகிற கட்சி முதல்வருக்கு அழகல்ல.
எடப்பாடி பழனிசாமி நெருப்பாற்றில் நீந்தி மக்கள் பணியாற்றி வருகிறார். செயல்தலைவர் என்ற பதவி இல்லாதபோது ஸ்டாலினை திருப்திப்படுத்த அந்தப் பதவியை உருவாக்கினார்கள். துணைமுதல்வர் பதவியை உருவாக்கி அதிலும் இருந்தார். 48 ஆண்டு கால உழைப்பால் உயர்ந்தவர் எடப்பாடி. எத்தகைய விமர்சனங்களையும் சிரிப்பால் எதிர்கொண்டு மக்கள் பணி ஆற்றுபவர்.
திமுக சட்டமன்ற உறுப்பினர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் எத்தனை பேர் திமுகவுக்கு எதிராக பேசுவார்கள் என முதல்வர் ஸ்டாலினுக்கு தெரியவரும். உண்மை கண்டறியும் சோதனை நடத்தினால் திமுக எம்.எல்.ஏ க்கள் தமிழகத்தில் தற்போது அதிமுக ஆட்சி வேண்டும் என சொல்லுவார்கள்.
அதிமுகவிலிருந்து நீக்கபட்ட ஒருசில துரோகிகளை தவிர அனைவரும் எடப்பாடி பழனிசாமியின் கீழ் ஒற்றுமையாக உள்ளோம். அதிமுகவில் இருந்த ஒருசில துரோகிகளின் பின்புலத்தில் இருந்து கொண்டு திமுக, அதிமுகவுக்கு எதிராக செயல்படுகிறது. அதிமுக செயல்பாடுகளுக்கு முட்டுக்கட்டையாக உள்ளவர்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஓபிஎஸ் சுற்றுப்பயணம் குறித்து அவரிடம்தான் கேட்க வேண்டும்.
சசிகலா வைத்திலிங்கம் சந்திப்பு குறித்த கேள்விக்கு பதிலளிக்காமல் பேருந்து பழுதானது குறித்து பேசி மழுப்பினார். சொத்துவரி உயர்வு, மின்சார கட்டண உயர்வு, வாக்குறுதி நிறைவேற்றாமல் போனது ஆகியவற்றில் முதல்வர் ஸ்டாலின் முதலிடம் வகிக்கிறார். அதிமுகவில் இருந்து ஒ.பி.எஸ் நீக்கப்பட்டுள்ளார், அதிமுகவிலிருந்து நீக்க செய்யப்பட்டவர்கள் குறித்து நான் பேச தயாராக இல்லை எனத் தெரிவித்தார்.