முதல்வர் ஸ்டாலின், அண்ணா அறிவாலயம் pt web
தமிழ்நாடு

மக்களவை தேர்தல் 2024 | 4 கட்சிகளுடன் தொகுதிப்பங்கீட்டை இறுதி செய்தது திமுக!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ஐயுஎம்எல், கொங்கு மக்கள் தேசிய கட்சி என 4 கட்சிகளுடன் திமுக தொகுதி பங்கீட்டு எண்ணிக்கையை இறுதி செய்துள்ளது.

Angeshwar G

திமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் கையொப்பமிட்டு எத்தனை தொகுதிகள் என்பதை இறுதி செய்துள்ளனர். இதில் எந்தெந்த தொகுதிகள் என்பதை இறுதி செய்யவில்லை.

இதுகுறித்து செய்தியாளர்களைச் சந்தித்த கே.பாலகிருஷ்ணன், “இருமுறை பேச்சுவார்த்தை நடைபெற்றது. பேச்சுவார்த்தையில் தொகுதியின் எண்ணிக்கையை அதிகமாக கேட்டோம். ஏற்கனவே இரு இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த சூழலில் கூடுதலான இடங்களை கேட்டிருந்தோம். ஆனால் ஏற்கெனவே கூட்டணியில் பல கட்சிகள் இருக்கின்றன. புதிதாக சில கட்சிகளும் கூட்டணியில் இணையும் என்ற சூழல் உள்ளது. அதனால் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வாய்ப்பில்லை எனும் அடிப்படையில் தற்போதைக்கு உடன்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல கட்சிகளுடன் உடன்பாடு ஏற்பட்ட பின் எந்தெந்த தொகுதிகளில் போட்டியிடுவது என்பது பிறகு பேசிக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.

அதேபோல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கும் 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இங்கும் எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்து முடிவு செய்யப்படவில்லை. இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், “சென்ற முறை இரு தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றோம். நாடு காப்பாற்றப்பட வேண்டும், ஜனநாயகம் காப்பாற்றப்பட வேண்டும், மதச்சார்பின்மை காப்பாற்றப்பட வேண்டும் என்பதற்காக உடன்பாட்டை ஏற்றுள்ளோம்” என தெரிவித்தார்.

இதேபோல கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, ஐயுஎம்எல் ஆகிய கட்சிகளுக்கு திமுக கூட்டணியில் தலா ஒரு தொகுதியை திமுக ஒதுக்கீடு செய்துள்ளது. கொ.ம.தே.க-விற்கு நாமக்கல் தொகுதியை திமுக ஒதுக்கியுள்ளது. ஐயுஎம்எல் கட்சிக்கு ஒதுக்கிய ராமநாதபுரம் தொகுதியில் நவாஸ் கனியே மீண்டும் போட்டியிடவுள்ளார்.