E.V.Velu, Tollgate Twitter
தமிழ்நாடு

”சுங்கக் கட்டணத்தை நீக்க வேண்டும் என்பதே தமிழக அரசின் நோக்கம்” - பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்!

சுங்கக் கட்டணம் முழுமையாக நீக்கப்பட வேண்டும் என்பதே தமிழ்நாடு அரசின் நோக்கம் என பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

webteam

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்றைய (ஏப்.,01) விவாதத்தின் மீது சுங்க கட்டண உயர்வு குறித்து சட்டமன்ற உறுப்பினர்கள் கே.பி.அன்பழகன் மற்றும் வேல்முருகன் கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதிலளித்து பேசிய பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு, ”சுங்கச்சாவடிகளில் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து பல்வேறு மனுக்களை சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்துள்ளனர். தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகள் 6805 கி.மீ நீளம் கொண்டவை. 58 சுங்கச்சாவடிகள் உள்ளன.

மத்திய அரசு, நடைமுறையில் உள்ள சட்டப்படியே சுங்கக் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டு வருகிறது. 36 சுங்க சாவடிகளில் சுங்கக் கட்டணம் தனியார் மூலம் வசூலிக்கப்படுகிறது.

மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்திக்கும் போதெல்லாம் தமிழகத்தில் சுங்கச்சாவடிகளை அகற்ற கோரிக்கை வைப்பதோடு, சுங்க கட்டணத்தை நீக்கவும், குறைக்கவும் வலியுறுத்தி வருகிறோம். அதேபோல், கடிதமும் எழுதி வருகிறோம். கடந்த மார்ச் 18 ஆம் தேதியும் இறுதியாக கடிதம் அனுப்பபட்டுள்ளது.

சுங்கச்சாவடிகளில் பராமரிப்புக்காக கட்டணம் வசூலித்தாலும் 40 சதவீதத்திற்கும் குறைவாகவே கட்டணத்தை வசூலிக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். திமுக அரசை பொருத்தவரை சுங்க கட்டணம் முழுமையாக எடுக்கப்பட வேண்டும், சுங்க கட்டணத்தை நீக்க வேண்டும், குறைக்க வேண்டும் என்பதற்கு தொடர்ந்து குரல் கொடுப்போம்” என்று அவர் உறுதிப்பட தெரிவித்தார்