annamalai pt
தமிழ்நாடு

"GPay மூலமாக வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்கிறார் அண்ணாமலை " தேர்தல் அலுவலரிடம் திமுக புகார்!

PT WEB

செய்தியாளர் - சந்தான குமார்

கோவை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தேர்தல் நடத்தை விதிகளுக்கு எதிராக வாக்காளர்களுக்கு அலைபேசி மூலம் அழைத்து தனக்கு வாக்களிக்குமாறு கேட்டு GPay மூலம் பணம் அனுப்பி வருவதாக தேர்தல் நடத்தும் அலுவலரிடம் திமுக சார்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக, மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரிடம் புகார் அளித்து எந்த ஒரு நடவடிக்கையும், இல்லாததால் மாநில தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Annamalai

இதுதொடர்பாக, சென்னை அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய வழக்கறிஞர் சரவணன் கூறியதாவது, தேர்தல் பரப்புரை முடிவடைந்த பின் தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத நபர்கள் அங்கு இருக்க கூடாது என விதிமுறைகள் இருந்தாலும், சென்னையை சார்ந்த ஜெயபிரகாஷ், அண்ணாமலை மைத்துனர் சிவகுமார்,சென்னையை சார்ந்த கிருஷ்ணகுமார் என கோவை தொகுதிக்கு சம்மந்தம் இல்லாத நபர்கள் அங்கிருந்து கொண்டு GPAY மூலம் பணம் அனுப்பி வருகின்றனர்.

இது தொடர்பாக புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. காவல்துறை அதிகாரிகளிடம் இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. விரைவில் அவர்களை வெளியேற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என நம்புவதாக அவர் தெரிவித்தார்.

தமிழகத்தில் தேர்தல் வாக்குப்பதிவு நாளை ஒரே கட்டமாக நடைபெறும் நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மாநிலம் முழுவதும் தயார் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது