குஷ்பு-சிவாஜி கிருஷ்ணமூர்த்தி PT Desk
தமிழ்நாடு

திமுக பேச்சாளர் நிரந்தர நீக்கம்; அதிரடி கைது.. குஷ்பு பேசிய சில நிமிடங்களிலேயே பாய்ந்த நடவடிக்கை!

''நான் நேராகவே முதல்வர் ஸ்டாலினை பார்த்து சொல்கிறேன்; குஷ்புவை சீண்டி பார்க்காதீர்கள்; திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள்''

PT

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினரும், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராகவும் உள்ள நடிகை குஷ்பு குறித்து, பொதுமேடையில் அவதூறாக பேசிய திமுக உறுப்பினர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி குறித்து சென்னை ஆர்.ஏ.புரத்தில் உள்ள தனது அலுவலகத்தில் நடிகை குஷ்பு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது பேசிய அவர், “திமுகவில் இருக்கக்கூடிய மூன்றாம் தர பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, ஒரு பொது மேடையில் என்னைப் பற்றி மிகவும் அவதூறு ஆகவும் கேவலமாகவும் தரக்குறைவாக பேசியுள்ளார். பெண்களை அசிங்கபடுத்தி பேசுவதுதான் புதிய திராவிட மாடலா?. பெண்களை அவதூறாக பேச யார் உரிமை கொடுத்தது. நான் நேராகவே முதல்வர் ஸ்டாலினை பார்த்து சொல்கிறேன், குஷ்புவை சீண்டி பார்க்காதீர்கள்; திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள்; என்னைப் பற்றி எல்லோருக்கும் தெரியும்" என்று தெரிவித்திருந்தார்.

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கம்

குஷ்பு ஆவேசமாக பேட்டியளித்த சில நிமிடங்களில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் இருந்து நிரந்தரமாக நீக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக, திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் விடுத்துள்ள அறிக்கையில், “சென்னை வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த தலைமைக் கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, கழகக் கட்டுப்பாட்டை மீறியும், கழகத்திற்கு அவப்பெயர் ஏற்படும் வகையிலும் செயல்பட்டு வந்ததால், அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்பிலிருந்தும் நிரந்தரமாக நீக்கி (Dismiss) வைக்கப்படுகிறார்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

”நீக்கியது சந்தோஷம்; ஆனால்..” - குஷ்பு ரியாக்‌ஷன்

இந்நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்தி நீக்கப்பட்டது குறித்து குஷ்பு செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, “சிவாஜி கிருஷ்ணமூர்த்தியை திமுகவில் இருந்து நீக்கியது சந்தோஷம். ஆனாலும் அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறியுள்ளார்.

உடனடியாக வழக்குப் பதிவு - அதிரடி கைது

நடிகையும் பாஜக நிர்வாகியுமான நடிகை குஷ்புவை பற்றி பொதுக்கூட்ட மேடையில் அவதூறாக பேசியதாக திமுக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது கொடுங்கையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. உடனடியாக கைது செய்யப்பட்டு காவல் நிலையம் அழைத்து வரப்பட்டுள்ளார்.