தமிழ்நாடு

பைனான்சியரை கடத்தி ஒரு கோடி கேட்ட திமுக நிர்வாகி கைது!

பைனான்சியரை கடத்தி ஒரு கோடி கேட்ட திமுக நிர்வாகி கைது!

webteam

பொள்ளாச்சியில் பைனான்சியரை காரில் கடத்திச்சென்று கத்தியை காட்டி மிரட்டி ஒரு கோடி ரூபாய் கேட்டதாக முன்னாள் திமுக கவுன்சிலர் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

பொள்ளாச்சி கோட்டூர் ரோடு பகுதியை சேர்ந்தவர் சாந்தகுமார்(40). பைனான்ஸ் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் இவர் கடந்த 13-ம் தேதி மதியம் கடைவீதிக்கு சென்றுவிட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது கோட்டூர் ரோடு பாலத்தில் அருகே சென்று கொண்டிருந்தபோது, எதிரே காரில் வந்தவர்கள் சாந்தகுமாரை தாக்கி கடத்திச் சென்று கத்தியைக் காட்டி ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. ஆனால் சாந்தகுமார் பணம் தர மறுத்ததால் அவரை தாக்கிய கடத்தல்காரர்கள், சென்றான்பாளையம் பகுதியில் உள்ள சாலையோரத்தில் வீசிவிட்டு சென்றுள்ளனர். பின்னர் சாந்தகுமார் அங்கிருந்து தப்பித்து பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

தொடர்ந்து இதுகுறித்து சாந்தகுமார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதில், முன்னாள் திமுக கவுன்சிலர் கண்ணன் உட்பட ஆறு பேர் தன்னை காரில் கடத்திச்சென்று கத்தியை காட்டி ஒரு கோடி ரூபாய் பணம் கேட்டு மிரட்டியதாக குறிப்பிட்டிருந்தார். புகாரை பெற்றுக் கொண்ட காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து சாந்தகுமாரை கடத்தியவர்களை தேடிவந்தனர்.

இந்நிலையில் நேற்று மதியம் பொள்ளாச்சி அருகே உள்ள மோதிரம் புரம் பகுதியில் சாந்தகுமாரை கடத்திய கண்ணன் உள்ளிட்ட 4 பேர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற தனிப்படை போலீசார் பதுங்கி இருந்த திமுக நிர்வாகி கண்ணன்(51) பொள்ளாச்சி காமாட்சி நகர் பகுதியைச் சேர்ந்த நவீன் குமார்(27) கண்ணப்பன் நகரைச் சேர்ந்த ஸ்டாலின்(30) காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த ஜான்சன்(26) உள்ளிட்ட 4 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பொள்ளாச்சி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த கடத்தலுக்கு உடந்தையாக இருந்த ஆனைமலை பகுதியை சேர்ந்த பாலாஜி மற்றும் சதீஷ் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர்.