உதயநிதி தேர்தலில் போட்டியிடவில்லை என வெளியான தகவல் தவறானது என கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.
திமுகவின் கே.என்.நேரு மற்றும் ஆர்.எஸ்.பாரதி ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது, “உதயநிதி தேர்தலில் போட்டியிடவில்லை என வெளியான தகவல் தவறானது. பிக்பிரதர் என்ற மனப்பான்மையுடன் கூட்டணிக்கட்சிகளுடன் திமுக செயல்படவில்லை.
இன்னும் 2 அல்லது 3கட்ட பேச்சுவார்த்தையில் தொகுதி பங்கீடு இறுதியாகும். பெரும்பான்மையான தொகுதிகளில் திமுக போட்டியிடும். எத்தனை தொகுதிகளில் திமுக போட்டியிடும் என்பதை ஸ்டாலின் அறிவிப்பார். தனிச்சின்னம் தொடர்பான விவகாரம் எங்களுக்கும் கூட்டணிக்கட்சிகளுக்கும் உள்ள பிரச்னை. தேர்தலுக்காகவே வன்னியர் உள் ஒதுக்கீட்டை அதிமுக அரசு அறிவித்தது” என்றனர்.
மேலும், “ராமர் கோயில் கட்ட மஸ்தான் நிதி அளித்தது மத நல்லிணக்க அடிப்படையில்தான். நாங்கள் ராமருக்கு எதிரானவர்கள் அல்ல. திமுகவில் பலரின் பெயர் ராமர் என்று உள்ளது. அறுபடை வீடுகளிலும் திமுகதான் வெற்றி பெற்றுள்ளது. வேல் வைத்திருப்பவர்கள் மட்டும்தான் முருகனை வணங்குபவர்கள் என்று அர்த்தமா?” என்று அவர்கள் கூறினர்.