தமிழ்நாடு

கிராம சபைக் கூட்டம்: தமிழக அரசின் சுற்றறிக்கையால் கூட்டத்தின் பெயரை மாற்றிய ஸ்டாலின்!

webteam

கிராம சபை என்ற பெயரில், அரசியல் கட்சியினரோ, தனி நபரோ கூட்டங்களை நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், திமுகவின் கிராம சபை பரப்புரை கூட்டங்களை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என ஸ்டாலின் தெரிவித்தார்.

தமிழகத்தில் தேர்தல்களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிரமாக பிரசாரத்தை தொடங்கியுள்ளன. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் சமீபத்தில் நடைபெற்றது. அதில், பிரசார தொடர்பான அறிவிப்பை வெளியிட்டது திமுக. அதன்படி, 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பெயரில் பரப்புரை நடைபெறும் என்றும், அதே பெயரில் கிராமசபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டுமென்றும் திமுக குறிப்பிட்டது. அன்று முதல் திமுகவினர் பல்வேறு இடங்களில் 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற பெயரில் மக்கள் கூட்டங்களை நடத்தி வருகின்றனர். திமுக தலைவர் ஸ்டாலினும் கிராம சபைக் கூட்டங்களை நடத்தி வருகிறார். இந்நிலையில் கிராம சபை என்ற பெயரில், அரசியல் கட்சியினரோ, தனி நபரோ கூட்டங்களை நடத்துவதற்கு மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கக் கூடாது என தமிழக அரசு அறிவித்துள்ளது.

மாவட்ட ஆட்சியர்களுக்கு ஊரக வளர்ச்சித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கிராம சபை என்பது அரசியல் சார்பற்றது என்றும் சில அரசியல் கட்சிகள் கிராம சபை என்ற பெயரில் அரசியல் ஆதாயம் தேடும் நோக்கில் மக்களை குழப்புவதற்காக கூட்டங்கள் நடத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊராட்சி சட்டத்தின்படி, கிராம சபையைக் கூட்டும் அதிகாரம் ஊராட்சித் தலைவர், ஊராட்சிகளின் ஆய்வாளர், மாவட்ட ஆட்சியருக்கு மட்டுமே உள்ளது என்று கூறியுள்ள ஊரக வளர்ச்சித் துறை, கிராம சபைக் கூட்டம் என்ற பெயரில், தனி நபரோ, அரசியல் கட்சிகளோ கூட்டங்களை கூட்டுவது சட்டத்திற்கு எதிரானது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது போன்று கிராம சபைக் கூட்டங்களை நடத்த மாவட்ட ஆட்சியர்கள் அனுமதிக்கக் கூடாது எனவும் கிராம சபை பெயரை பயன்படுத்தி அரசியல் கூட்டம் கூட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.



தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பின் இன்று மரக்காணத்தில் மக்களை சந்தித்த மு.க. ஸ்டாலின், மக்கள் கிராம சபை கூட்டத்தை நடத்தி வருகிறார். கிராம சபைக் கூட்டத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ள நிலையில் இந்த பெயர் மாற்றத்தில் மக்களை சந்தித்து வருகிறார் ஸ்டாலின். கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ''கிராம சபைக் கூட்டத்திற்கு அனுமதி அளிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியர்களுக்கு அரசு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. ஆனால் தற்போது நடைபெறுவது 'மக்கள் கிராம சபைக் கூட்டம்'. இந்தக் கூட்டத்திற்கு நான் தான் கலெக்டர்'' என தெரிவித்தார்.

முன்னதாக இது குறித்து அறிக்கை வெளியிட்ட ஸ்டாலின், " 'அதிமுகவை நிராகரிக்கிறோம்' என்ற கிராமசபைக் கூட்டங்களில் அனைத்துத் தரப்பு மக்களும் கூடுவதைப் பார்த்து முதலமைச்சர் பழனிசாமி அதிர்ச்சியில் மூழ்கியிருக்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி மன்றங்களில் அமைக்கப்படும் கிராமசபை வேறு திராவிட முன்னேற்றக்கழகம் நடத்தும் கிராமசபைக் கூட்டம் வேறு என்பதை கூட இந்த உத்தரவின் பின்னணியில் ஒளிந்திருக்கும் முதலமைச்சர் உணரவில்லை. இருப்பினும் திமுகவின் கிராம சபைக் கூட்டங்கள் இனி மக்கள் கிராம சபைக்கூட்டம் என்ற பெயரில் நடத்தப்படும்'' என்று குறிப்பிட்டிருந்தார்