தமிழ்நாடு

வதந்திகள் நடுவே வாழ்ந்து காட்டும் திமுக தலைவர் கருணாநிதி!

webteam

இந்த நூற்றாண்டின் பெரும் சாபமென்றே வதந்திகளை கூறலாம்… இணையமயமாகிவிட்ட 21 ஆம் நூற்றாண்டில் உண்மைகளை விடவும், வதந்திகள்தான் அதிகம் மக்களை அடைகின்றன…

அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நாள்  முதலே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை குறித்த வதந்தி இணையம் வழியாக இந்தியா முழுமைக்குமான பேசு பொருளாய் அமைந்தது.. அதற்குச் சற்றும் குறைவில்லாதது திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்த வதந்திகள்… இன்னும் சொல்லப்போனால் கருணாநிதி மருத்துவமனைக்குச் சென்றாலே வதந்திகள் காற்றில் கலக்கத் தொடங்கிவிடும்..

2012 டிசம்பர் 5, மாநிலத்தின் பல்வேறு இடங்களிலும் திமுக தலைவர் கருணாநிதி என்ற பெயர் ஒலித்துக் கொண்டே இருந்தது. காரணம் அவரின் உடல்நிலை குறித்த வதந்தியே… இந்நிலையில் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்து, நலமுடன் இருக்கும் போதே உடல்நிலை குறித்து வதந்தி பரப்புவதா என அவரே கண்டித்து, வதந்திகளை அணைத்தார் கருணாநிதி..

டிசம்பர் 27, 2014 இடுப்பு வலிக்காக மருத்துவமனைக்குச் சென்றிருந்தார் கருணாநிதி.. ஆனால் அது இதயவலி எனப் பரவ, திமுக தொண்டர்களின் இதயமாய் இருக்கும் கருணாநிதியை காண அறிவாலயம் நோக்கிப் படையெடுத்தனர் திமுகவினர். திமுக பொதுச்செயலாளர் அன்பழகனும், திமுகவின் அன்றைய பொருளாலரான ஆற்காடு வீராசாமியும் பல விளக்கங்களை அளித்து அந்தப் புரளிகளைக் கட்டுப்படுத்தினர்.

சில மாதங்களுக்கு முன், செப்டம்பர் 26, 2017 அன்று சிறப்புக் காவல்படையினர் தயார் நிலையில் இருக்கும்படி டிஜிபி உத்தரவிட்டதாகத் தகவல் பரவியது.. கருணாநிதியின் உடல்நிலையே டிஜிபியின் இந்த அறிவுறுத்தலுக்குக் காரணம் எனக் கருதி தமிழகமெங்கும் கருணாநிதி குறித்த வதந்திகள் பரவின... வதந்தி பரவிய சில நாட்களில், அக்டோபர் 19 ஆம் தேதி முகமெங்கும் புன்னகையை ஏந்தி முரசொலி அலுவலகம் வந்து, வதந்திகளை வென்றெடுத்தார் திமுக தலைவர் கருணாநிதி. 

இப்போது காவேரி மருத்துவமனை வெளியிட்டிருக்கும் இதே போன்றதொரு அறிக்கையை திமுக தலைமை அக்டோபர் 24, 2016 இல் வெளியிட்டது. காரணம் அன்றைய நாள்களில் கருணாநிதி குறித்துப் பரவிக் கொண்டிருந்த வதந்திகளே. தற்போதைய காவேரி மருத்துவமனை அறிக்கையில் இருக்கும் அதே அம்சங்கள் அன்றைய அறிக்கையிலும் இடம்பெற்றிருந்தன.

“திடீர் ஒவ்வாமை காரணமாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு திமுக தலைவர் கருணாநிதி வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். அவரை யாரும் சந்தித்து தொந்தரவு செய்ய வேண்டாம்” என்பதே அன்று வெளியான அறிக்கை.. இங்கு நினைவு கூறப்பட்டிருக்கும் சில நாட்களெல்லாம், கருணாநிதி குறித்து பரவும் வதந்திகளில் வெகுசிலவே. இன்னும் கருணாநிதி பற்றிய பரவிய வதந்திகள் ஏராளம் ஏராளம்.. அந்த வதந்திகள் பேசியோரையெல்லாம் வாயடைத்துப் போகச் செய்தது சில நாட்களுக்கு முன் கிரிக்கெட் பிரியர் கருணாநிதி பேரக்குழந்தைகளோடு விளையாடிய  கிரிக்கெட் காட்சிகள் வெளி வந்தன.

அதை போல மீண்டும் அவரின் கையசைப்பும், புன்னகைக்கும் முகமும், கரகரவென  ஒலிக்கும் “என் உயிரினும் மேலான உடன்பிறப்புகளே” என்ற குரலும் பொதுமேடைகளில் விரைவில் ஒலிக்கும் என நம்புவோம்.