2ஜி வழக்கில் ஆ.ராசா உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பெரம்பலூரில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்றனர்.
முன்னாள் அமைச்சர் ஆ.ராசாவின் சொந்த ஊரான பெரம்பலூரில், அலைக்கற்றை வழக்கில் விடுதலை என்ற தீர்ப்பு வந்தவுடன் திமுகவினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கட்சி அலுவலகம் முன்பு பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்திருந்த திமுகவினர் கொடிகளை ஏந்தியபடியும், கோஷங்களை எழுப்பியவாறும் இருசக்கர வாகனங்களில் பேரணியாக சென்றனர்.
2ஜி அலைக்கற்றை முறைகேடு வழக்கில் ஆ.ராசா, கனிமொழி உள்ளிட்டோர் விடுவிக்கப்பட்டனர். டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓம்பிரகாஷ் சைனி இத்தீர்ப்பை வழங்கினார். ராசா, கனிமொழி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டை சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்க சிபிஐ தரப்பு தவறி விட்டதாகவும் எனவே இவ்வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாகவும் நீதிபதி சைனி ஒரே வரியில் தீர்ப்பை அளித்தார். ராசா, கனிமொழி தவிர கலைஞர் டிவி முன்னாள் நிர்வாகி சரத்குமார், ஷாகித் பல்வா, வினோத் கோயங்கா, ஆசிஃப் பல்வா உள்ளிட்ட 17 பேரும் விடுவிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் சுமார் 7 ஆண்டு காலம் நீடித்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.