தமிழ்நாடு

“உணவின்றி தவித்தோரின் பசிப்பிணி நீக்கிய அட்சய பாத்திரம் அம்மா உணவகம்”: ஓபிஎஸ் - இபிஎஸ்

“உணவின்றி தவித்தோரின் பசிப்பிணி நீக்கிய அட்சய பாத்திரம் அம்மா உணவகம்”: ஓபிஎஸ் - இபிஎஸ்

Veeramani

சென்னை முகப்பேரில் உள்ள அம்மா உணவகம் சூறையாடப்பட்டதற்கு அதிமுகவின் ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக கண்டன அறிக்கை வெளியிட்டிருக்கிறார்கள்

சென்னை முகப்பேர் பகுதியில் உள்ள அம்மா உணவகத்துக்கு நேற்று திமுகவை சேர்ந்த சிலர் உருட்டுக்கட்டைகளுடன் சென்று, அங்கு மாட்டப்பட்டிருந்த மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் புகைப்படத்தை உடைத்து, பெயர் பலகையையும் சேதப்படுத்தினர். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த காய்கறிகள், மளிகைபொருட்களையும் சேதப்படுத்தி சூறையாடியுள்ளனர். இந்த காட்சிகள் வீடியோவாக சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த செயலுக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் கடுமையான கண்டனக்குரல் எழுந்தது.

இது தொடர்பாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும்  இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி கூட்டாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் “தேர்தல் முடிவுகள் வெளியாகி, திமுக ஆட்சி அமையப் போகிறது என்ற செய்தி வந்த சில நாட்களிலேயே, திமுகவினரின் வன்முறையும், அரசியல் அநாகரிகமும் தலைதூக்க ஆரம்பித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. திமுகவினர் தாக்குதல் நடத்தியிருப்பது ஒருபோதும் ஏற்புடையது அல்ல.

எவர் ஒருவரும் பசிப்பிணியால் வாடக்கூடாது என்று ஜெயலலிதாவால் ஏழை, எளிய மக்களுக்காக கொண்டு வரப்பட்ட அற்புதமான திட்டம் இது, இத்திட்டத்தை உலகமே வியந்து பாராட்டுகிறது. அம்மாவின் சிந்தனையில் உதித்த அம்மா உணவக திட்டத்தை அண்டை மாநிலங்கள் தொடங்கி, அண்டை நாடுகள் வரை பின்பற்றுகிறார்கள்.

பெருமழை, பெரு வெள்ளம் தொடங்கி, கொரோனாபேரிடர் காலங்கள் வரை உணவின்றி தவித்தோரின் பசிப்பிணி நீக்கிய அட்சய பாத்திரமாம் அம்மா உணவகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏழைகளின் வயிற்றில் அடிப்பதற்கு ஒப்பாகும். புதிதாக ஆட்சி பொறுப்பேற்கும் மு.க.ஸ்டாலின் அவர்கள், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பை சீர்குலைப்போர் மீது உடனடியாக சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என தெரிவித்தனர்.

அம்மா உணவகத்தின் மீது தாக்குதல் நடத்திய இரு திமுகவினரை கட்சியை விட்டு நீக்கிய திமுக தலைமை, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருக்கிறது. நேற்று சூறையாடப்பட்ட அம்மா உணவகமும். உடனே சீரமைக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது.