திமுக அதிரடி முகநூல்
தமிழ்நாடு

பொறுப்பில் இருந்து செஞ்சி மஸ்தான் நீக்கம்... விக்கிரவாண்டி திமுக வேட்பாளர் யார்?

விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் நீக்கப்பட்ட அடுத்த சில மணி நேரத்திலேயே விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வேட்பாளர் அறிவிப்பை வெளியிட்டு அடுத்தடுத்த அதிரடி நடவடிக்கையில் இறங்கியுள்ளது திமுக.

ஜெனிட்டா ரோஸ்லின்

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆட்சிக் காலத்தில் இருந்தே திமுகவில் அங்கம் வகித்துவருபவர் செஞ்சி மஸ்தான். இவர் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளராகவும், தமிழக சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராகவும் செயல்பட்டு வருகிறார். இச்சூழலில், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் பொறுப்பிலிருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று நீக்கப்பட்டுள்ளார்.

செஞ்சி மஸ்தான்

முன்னதாக கடந்த ஏப்ரல் மாதம் விழுப்புரம் மாவட்ட விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.வும், விழுப்புரம் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளராகவும் பணியாற்றி வந்த புகழேந்தி உடல்நலக்குறைவால் காலமானார். அதையடுத்து அத்தொகுதி காலி தொகுதி என அறிவிக்கப்பட்டது. இச்சூழலில்தான் அத்தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் ஜூலை 10 ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

இச்சூழலில் இடைத்தேர்தலுக்கான அடுத்தக்கட்ட பணிகளை தீவிரப்படுத்தும் விதமான பணிகளை துவங்கியுள்ளது திமுக. இதில், விழுப்புரம் மாவட்டத்திற்கான பொறுப்பாளர்கள் இல்லாத சூழல் நிலவியதால் அங்கு சற்று கட்சிக்கு பின்னடைவு ஏற்படுமோ என்ற நிலை இருந்தது.

இந்நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தி குறிப்பின் வாயிலாக அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

அதில், ”விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருந்து அமைச்சர் செஞ்சி மஸ்தான் விடுவிக்கப்பட்ட சூழலில், அவருக்கு பதில் விழுப்புரம் வடக்கு மாவட்ட திமுக செயலாளராக ப.சேகர் நியமிக்கப்பட்டுள்ளார். விழுப்புரம் தெற்கு மாவட்ட பொறுப்பாளர் பொறுப்பில் கவுதம் சிகாமணி நியமிக்கப்பட்டுள்ளார்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை, இடைத்தேர்தலை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே விக்கிரவாண்டி இடைத்தேர்தலில், திமுக சார்பில் போட்டியிடப்போகும் வேட்பாளருக்கான பரிசீலனையை திமுக மேற்கொண்டு வந்தது. அதில், அங்கு வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு திமுக தரப்பில் தற்போது வெளியாகியுள்ளது.

இது குறித்து திமுக தனது சமூக வலைதளப்பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,”வருகிற 10-07-2024 அன்று நடைபெற உள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தலில் தோழமைக் கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக, திரு. அன்னியூர் சிவா (விவசாயத் தொழிலாளர் அணிச் செயலாளர்) அவர்கள் போட்டியிடுவார்.” என்று தெரிவித்துள்ளது.

அன்னியூர் சிவா

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் புதுச்சேரியையும் சேர்த்து 40 க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக, இந்த இடைத்தேர்தலிலும் தனது வெற்றியை உறுதிப்படுத்தும் நோக்கில், பல நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. அப்படியான நடவடிக்கையையாகவே செஞ்சி மஸ்தான் நீக்கமும், அன்னியூர் சிவா பற்றிய அறிவிப்பும் பார்க்கப்படுகிறது.