முதல்வர் மு.க.ஸ்டாலின் ட்விட்டர்
தமிழ்நாடு

மக்களவை தேர்தல் 2024 முடிவுகள் | 40க்கு 40 சொல்லியடித்த திமுக!

PT WEB

2019 மக்களவைத் தேர்தலில் விடுபட்ட ஒரு தொகுதியையும் சேர்த்து, தமிழ்நாடு, புதுச்சேரியின் 40 மக்களவைத் தொகுதிகளையும் வெற்றி கொண்டுள்ளது திமுக தலைமையிலான கூட்டணி. 2024 மக்களவைத் தேர்தல் இரண்டாவது சுதந்திரப் போராட்டம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது பரப்புரைகளில் தெரிவித்திருந்தது இங்கே குறிப்பிடத்தக்கது.

தேர்தல் பரப்புரையில் முதல்வர் மு.க.ஸ்டாலின்

திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினருக்காக வாக்கு சேகரித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், கோவையில் ராகுல்காந்தி உடன் இணைந்து பரப்புரை மேற்கொண்டார்.

தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளிலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை திமுக கூட்டணி 35க்கும் மேற்பட்ட இடங்களை பிடிக்கும், ஒரு சில இடங்கள் பிற கட்சிகளுக்கு செல்லும் என்று கணிக்கபப்ட்டது. ஆனால் அதற்கு மாறாக 40 தொகுதிகளையும் பிடித்து திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. தருமபுரி, விருதுநகர் மக்களவைத் தொகுதிகளில் கடைசி நேரம் வரை கடும் போட்டி நிலவியது என்றபோதும், 40 தொகுதிகளையும் திமுக தக்கவைத்துக் கொண்டுள்ளது.

வெற்றிக்குப் பிறகு முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், “பா.ஜ.க.வின் பணபலம் – அதிகார துஷ்பிரயோகம் – ஊடகப் பரப்புரை ஆகிய அனைத்தையும் உடைத்தெறிந்து INDIA கூட்டணி பெற்றுள்ள வெற்றி மகத்தானது; வரலாற்றுச் சிறப்புமிக்கது! அரசியல்சாசனத்தை மாற்றிவிடலாம் – வெறுப்பு பரப்புரைகளால் மக்களைப் பிளவுபடுத்தலாம் என்று நினைத்த பா.ஜ.க.வுக்கு எதிரான மக்கள் தீர்ப்பு 2024-க்கு நன்றி! இந்த வெற்றியைத் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களுக்குக் காணிக்கை ஆக்குகிறேன்” என்று உருக்கமாக தெரிவித்துள்ளார்.