சிவகார்த்திகேயன், பிரேமலதா விஜயகாந்த், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் pt web
தமிழ்நாடு

“திமுக ஆட்சி வாடகை ஆட்சி.. அமரன் எப்படி இருந்தாலும் பாராட்டக்கூடிய விஷயம்” - பிரேமலதா விஜயகாந்த்

“திமுக ஆட்சியை வாடகைக்கு வாங்கும் ஆட்சியாகத்தான் பார்க்கிறேன். மழைக்காலங்களில் படகு, பேருந்து எல்லாம் வாடகைக்கு வாங்கும் அரசு.. எதற்கும் நிரந்தர தீர்வு இல்லை” என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

PT WEB

செய்தியாளர் சந்தானகுமார்

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேசிய முற்போக்கு திராவிட கழக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் நடைப்பெற்றது.

தலைமை கழக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ், கழக துணை செயளாலர் பார்த்தசாரதி, கழக அவைத் தலைவர் இளங்கோவன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், கழக கொள்கை பரப்பு செயலாளருமான அழகாபுரம் மோகன் ராஜ் மற்றும் 82 மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தமிழக முதல்வர் ஸ்டாலின், தாங்கள் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டோம் என்று சொல்கிறார். ஆனால், உண்மை நிலவரம் என்னவென்று களத்தில் சென்று ஆர்ப்பாட்டம் நடத்துபவர்களை சந்தித்து பேசும் பொழுதுதான் தெரிகிறது. எவ்வளவு கோரிக்கைகள் இன்னும் நிறைவேற்றப்படாமல் உள்ளது என்பது தெரிகிறது” என்றார்.

திமுக கூட்டணியில் பல குளறுபடிகள்

தொடர்ந்து விஜய் பற்றிய கேள்விக்கு, “விஜய்யின் நிலைப்பாட்டை நீங்கள் விஜயிடம்தான் கேட்க வேண்டும். அவரின் எண்ணம் என்ன? வியூகம் என்ன? கூட்டணியா? இல்லையா? என்பது குறித்து அவரின் செய்தியாளர் சந்திப்பில் நீங்கள்தான் கேட்க வேண்டும். விஜய் மாநாடு அன்று என்னுடைய வலைதள பக்கத்தில் நான் பதிவிட்ட தகவல் தேமுதிக நிர்வாகிகள் எனக்கு அனுப்பியதுதான். அதைத்தான் நான் பகிர்ந்தேன். தமிழ்நாட்டில் மாபெரும் மாநாடு நடத்தி சரித்திர சாதனை படைத்தவர் கேப்டன்” என்றார்.

விஜய பிரபாகரனுக்கு கட்சியில் பதவி?

திமுக ஆட்சி குறித்து பேசுகையில், “திமுக கூட்டணியில் பல குளறுபடிகள் உள்ளன. இது 2026 ஆம் ஆண்டு வரை தொடருமா என்ற கேள்வியும் உள்ளது. திமுகவின் கூட்டணி ஆட்சியில் அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. கஞ்சா, மெத்தபெட்டமைன் போன்ற போதை வஸ்துகள் பல இடங்களில் வீட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.

திமுக ஆட்சி வாடகைக்கு வாங்கும் ஆட்சியாகதான் பார்க்கிறேன். மழை வந்தால் போட் பேருந்து என அனைத்தையும் வாடகைக்கு எடுக்கும் ஆட்சியாக உள்ளது. நிரந்தர தீர்வை ஏற்படுத்தி மக்களுக்கு வளர்ச்சியை ஏற்படுத்தும் அரசாக ஏற்றுக் கொள்ள முடியாது. வரும் டிசம்பர் மாதம் பெரு மழை உள்ளது போட் வாடகை எடுத்தால் பத்தாது. இது ஒரு நாள் மழைக்குதான். தொடர்ந்து மழை பெய்தால் என்ன ஆகும் என்பது தெரியாது தொலைநோக்கு பார்வையோடு நிரந்தரவு தீர்வு ஏற்படுத்த வேண்டும். தமிழக முதலமைச்சரும் துணை முதலமைச்சர் இதனை செய்ய வேண்டும். உதயநிதி ஸ்டாலின் நேற்று கூட எவ்வளவு மழை வந்தாலும் சமாளிப்போம் என்று சொல்லி உள்ளார். இது சினிமாவில் பேசும் டயலாக் கிடையாது” என்றார்.

அமரன் பாராட்டப்படக்கூடிய விஷயம்

அமரன்

அமரன் திரைப்படம் குறித்து பேசுகையில், “இன்னும் அமரன் திரைப்படத்தை நான் பார்க்கவில்லை. அமரன் திரைப்படம் எப்படி இருந்தாலும் அது பாராட்டப்படக்கூடிய விஷயம். முகுந்தனின் இறப்புதான் திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளது. அதற்கு படக் குழுவினருக்கும் சிவகார்த்திகேயன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். ஒருபுறம் வாழ்ந்திருந்தால் இன்னொருபுறம் பிரச்சனை இருக்கும். திரையிட்டு ஒரு வார காலத்திற்குப் பிறகு இஸ்லாமியர்கள் தங்கள் கருத்தை தெரிவித்துள்ளார்கள். உண்மை பொய் எது என்பதை ஆராய்ந்து அதற்குரிய தீர்வை தமிழக அரசு தர வேண்டும்” என தெரிவித்தார்.