தேமுதிக பொதுகூட்டம் PT
தமிழ்நாடு

நாடாளுமன்றத் தேர்தலில் தேமுதிக யாருடன் கூட்டணி? பிரேமலதா விஜயகாந்த் சொன்னது என்ன?

“விஜயகாந்த் மறைந்து இன்றுடன் 40 நாட்களான நிலையில், தேமுதிக அணியினர் இந்த நிமிடம் வரை கூட்டணி குறித்து மறைமுகமாகவோ நேரடியாகவோ எங்கும் பேசவில்லை. ஊடகங்களில் வரும் செய்திகள் யூகமாகவே கருதப்படுகிறது” - என்று தேமுதிக தெரிவித்துள்ளது.

PT WEB

தேமுதிக கூட்டணி குறித்து இறுதி முடிவு எடுக்கும் அதிகாரம் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேமுதிக மாவட்ட செயலாளர் கூட்டம் சென்னை கோயம்பேட்டுல் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது. முன்னதாக தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாவட்ட செயலாளர்கள் விஜயகாந்த் நினைவிடத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்

தேமுதிக நிறுவன தலைவர் இல்லாத முதல் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் இன்று நடந்தது. அதில் பேசிய தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா “கிறிஸ்த்துவ முறைப்படி 40வது நாள் என்பது, உயிர்ப்பித்து எழும்நாள். கேப்டன் அவர்கள் மறைந்து இன்றுடன் 40 நாட்கள் ஆகின்றன. இந்நாளில், கேப்டன் அவர்களின் லட்சியம் நிறைவேற நாம் உறுதியேற்க வேண்டும்” என்றார்.

தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் அனைவரும் பேச நேரமிருக்காது என்பதால், மாவட்ட செயலாளர்களிடம் வெள்ளைத்தாள் கொடுக்கப்பட்டது. அதில் கட்சி இம்முறை யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும், எதற்காக அந்தக் கட்சியுடன் கூட்டணி என்ற தங்களுடைய கருத்துக்களை செயலாளர்கள் எழுதிக் கொடுத்தனர்.

தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் 79 மாவட்ட செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள், அணித்தலைவர் என 100க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

நடிகர் விஜயகாந்த் மறைவு

வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் தேமுதிகவுக்கு விஜயகாந்த் இல்லாத முதல் தேர்தல். ஆகவே சரிவில் இருந்து சமாளித்து மாநிலக் கட்சி அங்கீகாரத்தை மீண்டும் பெரும் முனைப்பில் வலுவான கூட்டணியில் இணைய தேமுதிக திட்டமிட்டுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக - பாஜக - பாமக உடன் கூட்டணி அமைத்த தேமுதிக, வரும் நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக அல்லது பாஜக கூட்டணியில் இணைவது குறித்து ஆலோசனை நடத்தியது. இதில் கள்ளக்குறிச்சி, விருதுநகர் உட்பட தேமுதிகவுக்கு வாக்கு வங்கி அதிகம் உள்ள 7 தொகுதிகளை தேர்வு செய்துள்ளது.

தங்களின் கட்சிக்கு குறைந்தது 4 மக்களவைத் தொகுதிகளும், 1 ராஜ்யசபா பதவியும் அளிக்கும் கூட்டணியில் இடம்பெற தேமுதிக திட்டமிட்டுள்ளது. தவிர தேமுதிக நினைவிடத்தை கோயிலாக மாற்ற வேண்டும் என்றும், மாவட்டம் தோறும் விஜயகாந்த் சிலை நிறுவ வேண்டும் என்றும் 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.