பிரேமலதா விஜயகாந்த் pt web
தமிழ்நாடு

பாதியிலேயே அறுந்துவிழுந்த கொடி.. அமைதியான கட்சியினர்.. பாசிட்டிவாக பேசிய பிரேமலதா!

Angeshwar G

தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் கடந்த மாதம் 28 ஆம் தேதி மறைந்தார். அவரது மறைவை ஒட்டி தேமுதிக கட்சிக்கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று கொடி முழுவதுமாக ஏற்றப்பட்டது.

முன்னதாக கொடி ஏற்றப்படும் போது கயிறு அறுந்து கொடி கீழே விழுந்துவிட்டது. பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் ஏற்றும் முதல் கொடி என்பதால் அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து, மீண்டும் கொடி கட்டப்பட்டு ஏற்றப்பட்டது.

இதனை அடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “விஜயகாந்த் மறைவிற்கு பிறகு அரைக்கம்பத்தில் ஏற்றப்பட்டிருந்த கழக கொடி இன்று தமிழ்நாடு முழுவதும் அனைத்து ஊர்களிலும் முழுவதுமாக ஏற்றியுள்ளோம். ஏற்றும் போது கயிறு அறுந்து கொடி கீழே விழுந்துவிட்டது. ஒரு தடைக்கு பின்தான் மிக பெரிய வெற்றி வரும் என கூறுவார்கள். அதனால் கழக கொடியின் கயிறு அருந்த சம்பவம் என்பது எங்களுக்கு இருந்த தடைகள் அனைத்தையும் உடைத்தெறிந்து தேமுதிக பட்டொளி வீசி கட்சி எதற்காக தொடங்கப்பட்டதோ அந்த லட்சியத்தை நிச்சயம் அடையும்.

மணிமண்டபம் கட்டும் பணி விரைவில் தொடங்க உள்ளது, புதிதாக தொடங்கப்பட்டுள்ள டிரஸ்ட் மூலம் தினம்தோறும் இங்கு உணவு வழங்கப்படும் பல்வேறு உதவிகளையும் செய்ய உள்ளோம்.

கழக தொண்டர்கள் சார்பில் தமிழக அரசிடம் மணிமண்டபம் அமைக்க கோரிக்கை வைத்துள்ளோம் ஆனால் எந்த ஒரு பதிலும் தற்போது வரை கிடைக்கவில்லை. விஜயகாந்த் இறந்து 30 நாட்கள் மட்டுமே ஆகியுள்ளது எனவே அரசியல் பேச விரும்பவில்லை, இன்னும் ஒரு வாரத்தில் அரசியல் குறித்து பேசுவேன்” என தெரிவித்துள்ளார்.