இயற்கை வளத்திற்கும், விவசாயத்திற்கும் பேராபத்தை ஏற்படுத்தும் இ.ஐ.ஏ 2020 வரைவு அறிக்கையை உடனே மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மட்டுமல்லாது, அந்நாட்டின் சிறப்பான சுற்றுச்சூழலுக்கும் இயற்கை வளமே பிரதானம் என்பது நிதர்சனம். தற்போது மத்திய அரசு கொண்டு வந்துள்ள சுற்றுச்சூழல் தாக்க (இ.ஐ.ஏ 2020) வரைவு அறிக்கை தமிழகத்துக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் செயல் என அரசியல் கட்சி தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், “1984ஆம் ஆண்டு போபால் விஷவாயு கசிவுக்கு பிறகு சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டத்தை மத்திய அரசு 1986ஆம் ஆண்டு அமல்படுத்தியது. பின்னர், 2006ஆம் ஆண்டு இதில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு, தற்போது வரை அது நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் இந்த சட்டத்தில் மத்திய அரசு சமீபத்தில் மேலும் சில திருத்தங்களை செய்து சுற்றுச்சூழல் பாதிப்பு மதிப்பீடு சட்டம் 2020 என்ற வரைவு அறிக்கையை கடந்த 12ஆம் தேதி வெளியிட்டது. இதில் செய்யபட்டுள்ள திருத்தங்கள், ஏற்கனவே இச்சட்டத்தில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அம்சங்களை நீர்த்துப்போக செய்துவிட்டன” என்று தெரிவித்துள்ளார்.