ஆட்டுச்சந்தைகளில் விற்பனை  புதிய தலைமுறை
தமிழ்நாடு

தீபாவளி பண்டிகையையொட்டி ஆட்டுச்சந்தைகளில் விற்பனை அமோகம் - பல கோடி ரூபாயை தாண்டியது விற்பனை!

தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் கால்நடை சந்தைகளில் விற்பனை பல கோடி ரூபாயை தாண்டியது. அதேசமயம் சில இடங்களில் மழையால் விற்பனையும் பாதிக்கப்பட்டது.

PT WEB

தீபாவளி பண்டிகையை ஒட்டி தமிழகம் முழுவதும் கால்நடை சந்தைகளில் விற்பனை பல கோடி ரூபாயை தாண்டியது. அதேசமயம் சில இடங்களில் மழையால் விற்பனையும் பாதிக்கப்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் தேப்பனந்தல் கிராமத்தில் நடைபெற்ற மாட்டுச்சந்தையில் வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, விழுப்புரம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளாவிலிருந்து மாடுகள் விற்பனைக்காக கொண்டுவரப்பட்டன. அனைத்தும் நவீன மயமாகிவிட்டபோது, இந்த சந்தையில் கைவிரல் பிடித்தே, மாடுகளுக்கு வியாபாரிகள் விலை பேசுகின்றனர். இன்றைய சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு விற்பனை நடைபெற்றது. ஒரு கோடி அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றது.

சேலம் மாவட்டம் வீரனூரில் நடைபெற்ற கால்நடை சந்தையில் 2 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றது. குறைந்தபட்சம் 4 ஆயிரம் ரூபாயிலிருந்து அதிகபட்சமாக 18ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்பனையாகின. 60 கிலோ எடை கொண்ட ஆடு ஒன்று 20ஆயிரம் ரூபாய்க்கு விலைபோனது.

சேலம் காருவள்ளி ஆட்டுச்சந்தையிலும் விற்பனை களைகட்டியது. தீபாவளி பண்டிகைக்கான இறைச்சி தேவையை
பூர்த்தி செய்யும் வகையில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் சந்தைக்கு கொண்டு வரப்பட்டிருந்தன. 7 ஆயிரத்து 500 ரூபாயில் இருந்து 35ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விற்கப்பட்டன. சந்தை தொடங்கிய 4 மணி நேரத்திலேயே 5 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெற்றது.

நாமக்கல் வாரச்சந்தையில் விற்பனை தொடங்கிய சில மணி நேரங்களிலேயே 2 கோடி ரூபாய் அளவிற்கு வர்த்தகம் நடைபெற்றது. கேரளா, கர்நாடகா, ஆந்திராவை சேர்ந்த வியாபாரிகள் பலர் ஆடுகளை அதிகளவு வாங்கிச் சென்றனர். 20 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு வந்திருந்தன. 15 ஆயிரம் ரூபாயிலிருந்து 40 ஆயிரம் ரூபாய் வரை ஆடுகள் விலை போகின. ஆட்டுக்குட்டி கூட 2 ஆயிரம் ரூபாய் வரை விலை போனதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

விற்பனை அமோகமாக இருந்தாலும், மழையால் தூத்துக்குடியில் பாதிப்பும் ஏற்பட்டது. தென்மாவட்டங்களில் சிறப்பு பெற்ற தூத்துக்குடி ஆறுமுகநேரி ஆட்டுச்சந்தையில் 50 லட்சம் ரூபாய் அளவிற்கு ஆடுகள் விற்பனை நடந்தது.  பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் ஆடுகளை வாங்க வியாபாரிகள் முன்வரவில்லை என விவசாயிகள் ஆதங்கப்படுகின்றனர். 

எட்டயபுரம் சந்தையில் வழக்கமாகவே ஒரு கோடியிலிருந்து 2 கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெறும். அதே அளவுதான் தீபாவளி விற்பனையிலும் வர்த்தகமாகியுள்ளது. 5 ஆயிரத்திற்கும் அதிகமான ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன. ஆனால், அவற்றை வாங்க வியாபாரிகள் அதிகம் வரவில்லை.