Biryani pt desk
தமிழ்நாடு

தீபாவளியன்று பிரியாணி இல்லாட்டி எப்படி... ஆம்பூர் பிரியாணிக்கு குவியும் ஆர்டர்கள்!

ஆம்பூர் என்றாலே உணவுப் பிரியர்களின் நினைவுக்கு வருவது பிரியாணிதான். ஆம்பூர் பிரியாணி என்றாலே தனி மணமும், சுவையும் உண்டு. தற்போது தீபாவளி பண்டிகைக்காக அங்கு பிரியாணி ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

webteam

சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் முக்கிய நகரமாக திகழ்வது ஆம்பூர். தோல் பொருட்கள் தயாரிப்புக்கு பிரசித்தி பெற்ற ஆம்பூரில், மக்களின் பசியையும் நாக்கின் சுவை நரம்புகளையும் சுண்டி இழுக்கும் பிரியாணியும் வெகு பிரசித்தம். நூறு ஆண்டுகளுக்கு மேலாக கை பக்குவத்தோடு தயாரிக்கப்பட்டு வரும் பிரியாணியின் சிறப்பு சீரக சம்பா அரிசியில் செய்யப்படுகிறது.

biryani

இஞ்சி, பூண்டை அம்மிக்கல்லால் அரைத்தும், மிளகாய் பேஸ்ட், தக்காளி, கொத்தமல்லி புதினா, தயிர், எலுமிச்சம் சாறு தேவையான அளவு உப்பு போன்றவை கை பக்குவமாக அளவோடு போட்டு, பாலாற்று நீர், அடுப்பு எரிய புளியான் விறகு பயன்படுத்தி பதமாக கை பக்குவத்தோடு தயாரிக்கப்பட்டு வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது. இதனால் இந்த ஊரை கடப்பவர்கள், ஆம்பூர் பிரியாணியை சுவைக்காமல் செல்வதில்லை.

இந்த பிரியாணிக்காகவே வார விடுமுறை நாட்களில் ஆம்பூர் வருவோரும் உண்டு. இந்த தீபாவளி பண்டிகையையொட்டி, நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் கொடுப்பதற்காக பிரியாணி ஆர்டர்கள் குவிந்து வருகின்றன. பண்டிகைக்கு ஊருக்கு வருவோர், உறவினர்கள், சொந்தங்களுக்கு தந்து மகிழவும், உண்டு மகிழவும் ஆர்டர்கள் வருவதால், இங்கு பெரிய பெரிய அண்டாக்களில் பிரியாணி தயார் செய்யும் பணிகள் தீவிரமடைந்துள்ளன.