கோவை மாவட்டத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்து மாவட்ட ஆட்சியர் சமீரன் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் தினசரி அதிகம் கொரோனா பாதித்த மாவட்டங்களில் கோவை முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகளை விதித்துள்ள ஆட்சியர், மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் உள்ள துணிக் கடைகள், நகை கடைகள் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயங்க தடை விதித்துள்ளார். அனைத்து மால்களும், பூங்காக்களும் சனி, ஞாயிறுகளில் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் அத்தியாவசிய கடைகள் தவிர மற்ற அனைத்து கடைகளும் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும், அதற்கு ஏற்றவாறு 8 மணியில் இருந்து வாடிக்கையாளர்கள் வருவதை கட்டுப்படுத்த வேண்டும் எனவும், உணவகங்கள் மற்றும் பேக்கரிகள் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தைகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் 50 சதவீத கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல, உழவர் சந்தைகள் சுழற்சி முறையில் 50 சதவிகித கடைகளுடன் இயங்கவும், வாரச் சந்தைகள் அனைத்தும் செயல்பட தடை விதித்தும் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.