கலைச்செல்வி மோகன் புதிய தலைமுறை
தமிழ்நாடு

காஞ்சி: அரசுப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலப்பா?.. மறுப்பு தெரிவித்து மாவட்ட ஆட்சியர் விளக்கம்

காஞ்சிபுரம் அருகே பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலந்த விவகாரத்தில், காகம் அழுகிய முட்டையை கொண்டுவந்து போட்டதாக மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.

PT WEB

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அடுத்த திருவந்தவார் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் குடிநீர் தொட்டியில் மலம் கலக்கப்பட்டதாக புகார் எழுந்தது. பள்ளியில் 90க்கும் அதிக மாணவர்கள் பயின்று வரும் நிலையில், இந்த குடிநீர் தொட்டியைத்தான் மாணவர்கள் பயன்படுத்தி வருகிறார்கள். மதிய உணவுக்காக தொட்டியில் இருந்து தண்ணீரை பிடித்து உணவு தயார் செய்தபோது, குடிநீரில் இருந்து துர்நாற்றம் வீசியதால் வேறு குடிநீரில் உணவு தயார் செய்து தரப்பட்டுள்ளது.

இதையடுத்து பள்ளியின் உதவி தலைமையாசிரியர் காந்திராஜ் காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், வருவாய் கோட்டாட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் குடிநீர் தொட்டியின் மீது ஏறி ஆய்வு செய்தனர்.

இதையும் படிக்க: "அரசியல் எல்லாம் பேசவில்லை; எதார்த்தத்தை பேசுகிறேன்" ஜெயலலிதாவைப் பாராட்டி பேசிய முதல்வர் ஸ்டாலின்!

இதனை தொடர்ந்து தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற அவர்கள் உதவி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் மற்றும் சமையலர் உள்ளிட்டோரை தனித்தனியாக அழைத்து விசாரணை மேற்கொண்டனர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மாவட்ட ஆட்சியர், திருவந்தவார் நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக கூறப்பட்ட புகாருக்கு மறுப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகன், “அதிக பயனற்ற தொட்டியில் காக்கா கொண்டுவந்த போட்ட அழுகிய முட்டையால் துர்நாற்றம் வீசியுள்ளது; குடிநீர் தொட்டியை இடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிக்க: 16 பந்துகளில் 20 ரன் தேவை; ஆனாலும் தோனி செய்த மேஜிக்! வைரலாகும் Champions Trophy வின்னிங் மொமண்ட்ஸ்!