தமிழ்நாடு

பேராவூரணி அருகே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு!

பேராவூரணி அருகே 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுப்பு!

சங்கீதா

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே அருகே கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த அம்மன் சிலை கண்டெடுக்கப்பட்ட நிலையில், தற்போது 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலை கண்டெடுக்கப்பட்டு இருப்பதால் அப்பகுதியை தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி கிராமத்தின் போத்தியம்பாள் பறவைத் திடலில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பழமை வாய்ந்த அம்மன் சிலை ஒன்றைக் அப்பகுதி மக்கள் கண்டெடுத்தனர். இந்நிலையில், 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சமண தீர்த்தங்கரர் சிலையை அப்பகுதி மக்கள் கண்டெடுத்துள்ளனர். இந்த சிலை குறித்து பட்டுக்கோட்டை கோட்டாட்சியர் பிரபாகருக்கு அக்கிராம மக்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் கண்டுக்கப்பட்ட சமண சிலை குறித்து வருவாய் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சிலைகள் குறித்து தஞ்சை தமிழ் பல்கலைக்கழக தொல்லியல் ஆய்வாளர் மணிகண்டனிடம் நாம் கேட்டபோது, சமணர் சிற்பம் திகம்பரராக, தியான கோலத்துடன், நீண்ட துளையுடைய காதுகள், தலைப்பகுதி முகம் தெளிவற்று தேய்ந்த நிலையில் காணப்படுகிறது என்றும், விரிந்த மார்புடன் வடிக்கப்பட்டுள்ள சிற்பத்தில் ஒருசில இடங்களில் சிதைவுற்றுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

தலையின் பின்புறமாக முக்காலத்தையும் உணர்த்தும் விதமாக ஒளிவீசும் பிரபா வளையம் தெளிவற்று சிதைந்து காணப்படுகிறது என்றும், இது சமண சிற்பம் என்பதை உணர்த்தும் வகையில் மேற்பகுதியில் முக்குடை அமைப்பு உடைந்து முழுவதுமாக காணப்படவில்லை என்றாலும், உடைந்தப் பகுதியை வைத்து முக்குடை இருந்திருப்பதை அனுமானிக்க முடிகிறது என்றும், இது 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சிற்பமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் கூறுகையில் இச்சிற்பத்துடன் இயக்கி எனும் இசக்கி அம்மன் சிற்பமும் கண்டெடுக்கப்பட்டிருப்பதன் மூலம், இப்பகுதியில் சமண மதம் பரவியிருந்ததை உணர்த்தும் சான்றாக இச்சிற்பங்கள் உள்ளன என்றும், சிற்ப அமைதியின் அடிப்படையில் 12-ம் நூற்றாண்டைச்சேர்ந்த சிற்பமாக கருதலாம் என்றும், இதுகுறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டால் அப்பகுதியில் இன்னும் பல்வேறு பழங்கால வரலாற்றுச்சின்னங்கள் கண்டெடுக்க படலாம் எனவும் அவர் கூறியுள்ளார்.