செல்வராகவன், மகா விஷ்ணு pt web
தமிழ்நாடு

“யாரோ ஒருத்தர் உளருனா நீங்களும் போய் உட்காந்துப்பீங்களா?” - ஆவேசத்துடன் செல்வராகவன் கேள்வி!

”என்னங்க இது. யாரோ ஒருத்தர் என்னமோ உளரிக்கொண்டு, நான் குரு என சொல்லி கண்டதையும் பேசிக்கொண்டு இருந்தால், நீங்களும் அவர் முன்னால் போய் உட்கார்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொள்வீர்களா?” என்றார்.

Angeshwar G

ஆன்மீக சொற்பொழிவாளராக வலம் வந்த மகாவிஷ்ணு சென்னையில் அரசு பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிற்போக்குத்தனமான கருத்துகளால் சர்ச்சையில் சிக்கினார். அதுமட்டுமின்று பள்ளிக் குழந்தைகளிடம் மூடநம்பிக்கை தொடர்பான கருத்துக்களை தெரிவித்திருந்தார். இது மாநிலம் முழுவதும் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியது. பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில் இயக்குநர் செல்வராகவன் காணொலி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியதாவது, “என்னங்க இது. யாரோ ஒருத்தர் என்னமோ உளரிக்கொண்டு, நான் குரு என சொல்லி கண்டதையும் பேசிக்கொண்டு இருந்தால், நீங்களும் அவர் முன்னால் போய் உட்கார்ந்து கொண்டு கண்ணை மூடிக்கொள்வீர்களா?

உண்மையான குருவை நீங்கள் தேடிப் போக வேணாம். அவரே உங்களை தேடி வருவார். உங்களுடைய சந்திப்பு தானாக நடக்கும். இப்படி தொலைக்காட்சிகளில் விளம்பரப்படுத்திக் கொண்டு, மைக் எல்லாம் வைத்துக் கொண்டெல்லாம் நடக்காது. முக்கியமான விஷயம் என்னவென்றால், உண்மையான குரு தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவேமாட்டார்.

உங்களுக்கு ஒரு விஷயம் மட்டும் சொல்கிறேன். உலகத்திலேயே தியானம்தான் மிக எளிதான விஷயம். உலகத்தில் உள்ள எல்லா மதங்களும் போதிப்பது கடவுள் உங்களுக்குள் இருக்கிறார் என்பதைத்தான்.

இருப்பதிலேயே எளிதானது புத்தரது வழிமுறைகள். நாசிகளின் வழியாக காற்று போகும் இடத்தைச் சொல்லுவோம். அதில் உங்களது நினைப்பை வையுங்கள். நடுவில் வேறு எதாவது நினைப்பு வந்தாலும், அதை தடுக்க நினைக்காதீர்கள். நினைவுகள் வரும் செல்லும், மீண்டும் மனதை ஒருமுகப்படுத்துங்கள்.

காலங்கள் செல்ல செல்ல தன்னால் மற்ற நினைவுகள் எல்லாம் நின்றுவிடும். புத்தர் இதைத்தான் சொல்கிறார். இதில் மாற்றுக் கருத்தை உலகில் உள்ள யாராவது எனக்கு சொல்லுங்கள்” என தெரிவித்துள்ளார்.

மகா விஷ்ணு விவகாரத்தை ஒட்டி இந்த காணொலியை செல்வராகவன் வெளியிட்டிருந்தாலும், இது ஆன்மீகம் எனும் பெயரில் மோசடியில் ஈடுபடுபவர்களிடம் செல்லும் மக்களிடம் உரையாடுவதாகவே அமைந்துள்ளது.