விஜய், எஸ்.ஏ.சந்திரசேகரன் எக்ஸ் தளம்
தமிழ்நாடு

தவெக மாநாடு|கோயிலில் பூஜை செய்த ரசிகர்கள்.. ’ஆட்சி அமைப்பது’ குறித்து தந்தை சந்திரசேகர் சொன்ன பதில்!

த.வெ.க. முதல் மாநாடு விக்கிரவாண்டியில் நடைபெற உள்ள நிலையில், விஜய் பெரிய நிலைமைக்கு வர வேண்டும் என அவரது தந்தை தெரிவித்துள்ளார்.

Prakash J

தமிழக வெற்றிக்கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அடுத்த வி.சாலையில் அக்டோபர் 27ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், தவெக மாநாடு வெற்றி பெற, விஜய்க்குச் சொந்தமான கொரட்டூரில் உள்ள சாய் பாபா கோயிலுக்கு அவரது பெற்றோர் எஸ்.ஏ.சந்திரசேகர்- ஷோபா ஆகியோர் நேரில் சென்று சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும், கோயிலுக்கு வந்த பக்தர்களுக்கு விஜய்யின் தந்தை சந்திரசேகர் மற்றும் தாய் ஷோபா ஆகியோர் அன்னதானம் வழங்கினர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.ஏ.சந்திரசேகர், “தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும். தளபதிக்கு நல்ல பெயர் கிடைக்க வேண்டும். அவர் பெரிய நிலைமைக்கு வர வேண்டும். தமிழ்நாட்டிற்கு ஒரு பொக்கிஷம் கிடைக்க வேண்டும் என்று வேண்டி விஜய்க்காக, வடசென்னையைச் சேர்ந்த தவெக நிர்வாகிகள், மகளிர் அணியினர் இணைந்து கொரட்டூர் பாபா கோவிலில் அன்னதானம் செய்திருந்தனர்” என்றார்.

தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், அடுத்தகட்டமாக தனது அரசியல் பயணத்தை ஆரம்பித்துள்ளார். இதையடுத்து அவர் திரைப்படத்தில் நடிப்பதற்கு முழுக்கு போட்டுவிட்டு, முழுநேர அரசியலில் கவனம் செலுத்த உள்ளார். அந்த வகையில் விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற புதிய கட்சியை கடந்த பிப்ரவரி மாதத்தில் தொடங்கினார். வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி போட்டியிட போவதாகவும் அறிவித்த நிலையில், டெல்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணையத்திலும் கட்சி பதிவு செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து கடந்த ஆகஸ்ட் 22ஆம் தேதி விஜய் தனது கட்சியின் கொடி மற்றும் கொடிப் பாடலை அறிமுகப்படுத்தினார். இந்த நிலையில்தான், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27ஆம் தேதி, விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் கட்சியின் கொள்கைகள் அறிவிக்கப்பட இருக்கின்றன.

இதையும் படிக்க: கனடா | பிரதமர் ட்ரூடோ ராஜினாமா செய்ய காலக்கெடு! சொந்த கட்சியினரே எதிர்ப்பு.. பின்னணிக் காரணம் என்ன?