காதல் திருமணங்கள் மூலம் சாதியை ஒழிக்கமுடியும் என தாம் நினைக்கவில்லை என இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
நீலம் பண்பாட்டு மையம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட கலை நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற்றது. டிசம்பர் 29, 30, 31 ஆகிய 3 நாட்களில் இந்த “வானம் கலைத்திருவிழா” நடக்கிறது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்து கொண்டு பேசினார். பின்னர், செய்தியாளருக்கு பேட்டியளித்த அவர், “கலை நிகழ்ச்சி எந்த ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்காகவும் தனிப்பட்ட முறையில் நடத்தப்படுவது அல்ல. அனைத்து சமூகத்தினருக்கும் நிகழ்ச்சியின் கதவு திறந்தே இருக்கிறது. பல்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் கலைநிகழ்ச்சிக்கு தங்கள் பங்களிப்பை அளித்துள்ளனர்.
இங்கு வந்து பார்த்தால் தான் நாங்கள் என்ன செய்கிறோம் என்பது தெரியும். இங்கு விவாதிக்கப்படும் பொருளை கவனித்தால் தான் இதன் நோக்கம் விளங்கும். காதல் திருமணங்கள் மூலம் சாதி ஒழிப்பு சாத்தியம் என நினைக்கவில்லை. திருமணத்திற்கு பிறகு கூட ஏதாவது ஒரு சாதியில் சென்று சேர்ந்து கொள்ள வாய்ப்பு உண்டு. காதல், வேறுபாடுகளை மறந்து இரண்டு மனங்களை ஒன்றிணைக்கிறது. மக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லை. பெண்ணை ஒரு உடைமையாக பார்ப்பதுதான் ஆணவ படுகொலைகளுக்கு காரணம். பெண்ணை ஒரு உயிராக பார்த்தால் பிரச்னைகளுக்கு தீர்வு கிடைக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.