மோகன் ஜீ  முகநூல்
தமிழ்நாடு

“இந்த தைரியத்தில்தான் பேசினேன்.. திடீர்னு போலீஸ் வந்தாங்க.. என்ன நடந்ததுனே தெரியல” - இயக்குநர் மோகன்

”தமிழ்நாட்டில் கூட அம்மாதிரியான விவகாரம் செவிவழி செய்தியாக வருகிறது. எனவே, இங்கு இம்மாதிரி இருக்கலாம், இருந்திருக்கலாம், அப்படி இருந்தால் அது சரிசெய்யப்பட வேண்டும் என்றே கூறினேன். ஆனால், அது தவறான முறையில் சென்று சேர்ந்துவிட்டது” இயக்குநர் மோகன்

Angeshwar G

பஞ்சாமிர்தம் குறித்த சர்ச்சை கருத்து

திருப்பதி கோயில் லட்டு பிரசாத சர்ச்சை குறித்து சமூக ஊடகத்துக்கு பேட்டியளித்த திரைப்பட இயக்குநர் மோகன்ஜி, பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைபாட்டை ஏற்படுத்தும் மாத்திரைகளும், கருத்தடை மாத்திரைகளும் கலக்கப்பட்டதாக பகீர் தகவலை கூறியிருந்தார்.

மோகன் ஜீ

இந்த கருத்து பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. பலரும் இயக்குநர் மோகனின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். திருச்சி, பழனி என பல்வேறு காவல்நிலையங்களில் அவர்மீது புகாரும் அளிக்கப்பட்ட நிலையில், 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. திருச்சி எஸ்.பி வருண்குமார் உத்தரவை தொடர்ந்து, சென்னை ராயபுரத்தில் தனது வீட்டில் இருந்த மோகன்ஜி யை, தனிப்படை காவல்துறையினர் கைது செய்தனர். தொடர்ந்து, திருச்சி குற்றவியல் 3 ஆம் எண் நீதிமன்ற நீதிபதி முன்பாக மோகன்ஜி ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி மோகன் ஜியை அவரது சொந்த பிணையில் விடுவித்தார்.

மாலை 5 மணி வரை எங்கிருக்கிறேன் என்றே தெரியவில்லை

இந்நிலையில் இயக்குநர் மோகன் தனது வழக்கறிஞர் பாலுவுடன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நேற்று நான் என் குழந்தையை பள்ளிக்கு அனுப்ப, வாகனத்தில் ஏற்றிவிட்டு திரும்பும்போதே, 8 பேர் என்னைச் சுற்றி வந்துவிட்டனர். காவல் சீருடைகளைக் கூட அணியாமல் இருந்தார்கள். நான் அவர்களிடம் ‘வரமாட்டேன்’ என சொன்னேன். வழக்கறிஞரிடம் பேச வேண்டும். மனைவியிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என கூறியும் அவர்கள் எனக்கு எவ்விதமான உரிமையும் கொடுக்கவில்லை. ராயபுரம் காவல்நிலையத்திற்குதான் அழைத்துச் செல்கிறோம் என சொல்லி வலுக்கட்டாயமாக என்னை அழைத்து சென்றனர். ஆனால், அங்கும் செல்லவில்லை. நான் கேட்ட கேள்விகள் எதற்கும் பதில் சொல்லவில்லை. மாலை 5 மணி வரை எனக்கும் எங்கு இருக்கிறேன் என தெரியவில்லை. அழைத்துச் செல்பவர்களுக்கு எங்கு அழைத்து செல்கிறார்கள் என தெரியவில்லை. 5 மணிக்கு மேல்தான் மருத்துவமனைக்கு அழைத்து சென்று பின் நீதிமன்றத்திற்கு அழைத்து சென்றார்கள்.

வழக்கறிஞர் பாலுவும் அவர்களது குழுவினரும் நீதிமன்றத்தில் ஆஜராகி நீதியை வாங்கிக் கொடுத்தனர். நீதித்துறையின் மீது மிகுந்த நம்பிக்கை உடையவன் நான். சமூகத்தின் மீதும் மிகுந்த அக்கறை உடையவன் நான்.

பழனியில் இரு பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு

இந்த விஷயத்தை நான் பேசியதற்கு காரணமே, திருப்பதியில் கூட இப்படி நடந்துள்ளது. அதை முதலமைச்சரே பேசியுள்ளார் என்கிற தைரியத்தில்தான் பேசினேன். ஆந்திர முதலமைச்சரே இம்மாதிரி பிரச்சனை இருக்கிறது என சொல்கிறார். தமிழ்நாட்டில் கூட அம்மாதிரியான விவகாரம் செவிவழி செய்தியாக வருகிறது. எனவே, இங்கு இம்மாதிரி இருக்கலாம், இருந்திருக்கலாம், அப்படி இருந்தால் அது சரிசெய்யப்பட வேண்டும் என்றே கூறினேன். ஆனால், அது தவறான முறையில் சென்று சேர்ந்துவிட்டது. தனிப்பட்ட முறையில் யாருக்கும் கெட்ட பெயர் வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று சொல்லவில்லை. விழிப்புணர்வு என்ற முறையில் சொன்னதுதான்” என தெரிவித்தார்.

இந்நிலையில் பஞ்சாமிர்தம் குறித்து உண்மைக்கு மாறான தகவல்களை பிரபல திரைப்பட இயக்குனர் மோகன் ஜி பரப்பியதாக பழனி கோயில் நிர்வாகம் சார்பில் அடிவாரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. புகாரைப் பெற்ற போலீசார் மோகன் ஜி மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்துமத நம்பிக்கையாளர்களிடையே குழப்பம் ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தது; பக்தர்கள் மனம் புண்படும்படியும், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தது என இரு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து இயக்குனர் மோகனுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.