மோகன் ஜீ  முகநூல்
தமிழ்நாடு

பழனி பஞ்சாமிர்தம் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டு - இயக்குநர் மோகன் ஜி அதிரடி கைது!

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் மற்றும் பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குநர் மோகன் ஜீ இன்று காலை அவரது வீட்டிலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் மற்றும் பகாசுரன் ஆகிய திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் மோகன் ஜி, இன்று காலை அவரது வீட்டிலேயே வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் பஞ்சாமிதம் குறித்து சர்ச்சையான சில கருத்துக்களை தெரிவித்திருந்தார்.

அதில், “நாம் பெரிதாக பார்க்கும் ஒரு கோவிலில், பஞ்சாமிர்தத்தில் ஆண்மை குறைவை ஏற்படுத்தும் கருத்தடை மாத்திரகள் கலக்கப்படு விநியோகிக்கப்படுவதாக நான் செவி வழி செய்திகளை கேள்விப்படிருக்கிறேன். இதுகுறித்த செய்தியே வெளியே வராமல், வேறு ஒரு காரணத்தைகூறி மொத்த பஞ்சாமிர்தத்தையே அழித்துவிட்டதாககூட நான் கேள்வி பட்டிருக்கிறேன்” என்றார்.

அதற்கு நெறியாளர், ”பழனி கோயிலையா குறிப்பிடுகிறீர்கள்” என்று கேட்டதற்கு,

“அப்படி ஆதாரமின்றி ஒரு இடத்தின் பெயரை நம்மால் கூற முடியாது. ஆனால் தரமில்லாத பஞ்சாமிர்தம் தயாரிக்கப்பட்டது என்ற செய்தி ஒரு சமயம் வெளியானது. ஆனால், அது என்ன தரமில்லை என மக்களுக்கு தெரிவித்தார்களா?” என்றார் மோகன் ஜி.

நெறியாளர் உடனே, “இது பழனியில் நடந்த சம்பவம்தானே... அதை சொல்கின்றீர்கள் என்றால், அங்கேதான் தரமின்றி தயாரிக்கப்பட்ட பஞ்சாமிர்தம் உரிய முறையில் அழிக்கப்பட்டு காரணமும் அப்போதே அரசால் தெரிவிக்கப்பட்டுவிட்டதே...” என்றார்.

உடனடியாக மோகன் ஜி, “அழிக்கப்பட்டதுதான். ஆனால் ஏன் அழிக்கப்பட்டது என்று சரியாக சொல்லப்படவில்லை. அங்கே பணிப்புரிபவர்கள், சுற்றி இருப்பவர்கள் என்னிடத்தில் அந்த பஞ்சாமிர்தத்தில் கருத்தடை மருந்துகள் கலந்து இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவதாக தெரிவித்தார்கள்” என்று தெரிவித்துள்ளார். இது மத ரீதியான சர்ச்சையை ஏற்படுத்தியது.

திருப்பதி லட்டுக்களில் மாமிச கொழுப்பு கலக்கப்பட்டதாக எழுந்த புகார் குறித்த பேசுகையில், பழனியை தொடர்புபடுத்தி பேசி, ‘எல்லா இடங்களிலும் இப்படி நடக்கிறது’ எனக்கூறியிருந்தார் மோகன் ஜி. இதையடுத்து இந்த காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகி பலரின் எதிர்ப்புகளை சம்பாதித்தது.

இந்தநிலையில், இயக்குநர் மோகன் ஜி தமிழக போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. சென்னை காசிமேடு இல்லத்தில் இருந்து, இன்று காலை இவர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

பஞ்சாமிர்தம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் இவர் பேசியதுதான் காரணமென சொல்லப்படுகிறது. இது தொடர்பாக தகவலை தமிழக பாஜக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அந்த பதிவில் அவர், “சினிமா இயக்குனர் நண்பர் திரௌபதி மோகன் G அவர்கள் சற்று முன் தமிழக காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

என்ன காரணம், எந்த வழக்கு என்று எந்த முறைப்படியான தகவலும் குடும்பத்தினருக்கு கூறப்படவில்லை. இது உச்சநீதிமன்ற ஆணைக்கு எதிரானது. அவர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்ற தகவலும் இல்லை.

திமுகவினுடைய ஆட்சி அமைந்ததிலிருந்து எதிர்கருத்து பேசுபவர்கள் சட்டத்திற்கு புறம்பான முறையில் கைது செய்யப்படுவது வாடிக்கையாகிவிட்டது. கஞ்சா கள்ளச்சாரயத்தை கட்டுப்படுத்த முடியாத திராவிட மாடலின் காவல்துறை இதுமாதிரியான ஒடுக்குமுறைகளை மட்டும் சரியாக செய்கிறது” என்று தெரிவித்துள்ளார்.